கனடா குடியுரிமை விதிகளில் பெரிய மாற்றம்: அகதிகளுக்கு ஒரு நல்ல செய்தி
2009 முதல் நடைமுறையில் இருந்த இந்த சட்டம், வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களின் அடுத்த தலைமுறையினர் குடியுரிமை பெற முடியாத சூழலை உருவாக்கியது.
கனடா தனது குடியுரிமைச் சட்டங்களில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ளத் தயாராகியுள்ளது. தற்போது உள்ள விதிகளின்படி, வெளிநாட்டில் பிறந்த கனேடியர்கள்—அவர்களின் பிள்ளைகளும் வெளிநாட்டிலேயே பிறந்தால்—அந்த குழந்தைகள் கனேடிய குடியுரிமை பெறுவதில் தடை ஏற்பட்டு வந்தது. இந்த நிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் “Lost Canadians” என்று அழைக்கப்பட்டனர்.
2009 முதல் நடைமுறையில் இருந்த இந்த சட்டம், வெளிநாட்டில் பிறந்த கனேடியர்களின் அடுத்த தலைமுறையினர் குடியுரிமை பெற முடியாத சூழலை உருவாக்கியது. ஆனால், 2023 டிசம்பரில் ஒன்ராறியோ உயர் நீதிமன்றம் இந்த விதியை அரசியல் சாசனத்திற்கு முரணானது என்று அறிவித்து ரத்து செய்தது. கனடா அரசும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொண்டு மேல்முறையீடு செய்யவில்லை.
இந்த பின்னணியில் வடிவமைக்கப்பட்டுள்ள 2025 ஆண்டு குடியுரிமைச் சட்ட மசோதா, Bill C-3, மன்னரின் ஒப்புதலைப் பெற்ற நிலையில் தற்போது கனடா நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.
இந்த மாற்றங்கள் அமலில் வந்த பிறகு, வெளிநாடுகளில் பிறந்த கனேடிய குடிமக்களின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளும், அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் போது தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளும் நேரடியாக கனேடிய குடியுரிமை பெற முடியும். இது பல குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கும் விதியாகும்.