ஷ்ரேயாஸ் ஐயர் மிரட்டல் சதம்... உலகக் கோப்பையில் இனி இந்த வீரருக்கு வாய்ப்பே இல்லை
2013ஆம் ஆண்டுக்கு பின் கைக்கு எட்டாத ஐசிசி கோப்பைகள் உள்ளிட்ட பல காரணங்களால் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

2013ஆம் ஆண்டுக்கு பின் கைக்கு எட்டாத ஐசிசி கோப்பைகள் உள்ளிட்ட பல காரணங்களால் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
விராட் கோலி தலைமையில் கடந்த உலகக் கோப்பை தொடரில் (2019) இந்திய அணி அரையிறுதி வரை சென்று நியூசிலாந்திடம் கோட்டைவிட்டது.
அதேபோல், 2015இல் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோல்வியுற்று உலகக் கோப்பையை தவறிவிட்டது. எனவே, கடந்த இரு உலகக் கோப்பை தொடர்களை விட அதிக வலிமையுடன் இந்திய அணி களம் காண்வதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷமி என அனுபவ வீரர்களுடனும் கில், இஷான் கிஷன், சிராஜ், சூர்யகுமார், குல்தீப், அக்சர் படேல் என பார்மில் இருக்கும் வீரர்களும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகி உள்ளனர். இதே படை, ஆசிய கோப்பையை வென்று தற்போது ஒருநாள் அரங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
மேலும், உலகக் கோப்பை தொடருக்கு முன் தனது பலத்தை சோதித்து பார்க்க ஆஸ்திரேலியாவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாடி வருகிறது. கில், சூர்யகுமார், கேஎல் ராகுல், ஷமி, ஜடேஜா ஆகியோரின் சிறந்த பங்களிப்பால் முதல் போட்டியை இந்தியா வென்றது.
இந்தூரில் நடைபெற்று வரும் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. இதில், காயத்தில் இருந்து மீண்டு வந்த ஷ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டத்தை ஆடி சதமடித்து தனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளார் எனலாம்.
ருதுராஜ் 8 ரன்களில் ஆட்டமிழந்த பின், கில் உடன் இணைந்து அவர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். கில்லும் மறுமுனையில் சதத்தை பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில், ஷ்ரேயாஸ் பிளேயிங் லெவனில் தனது இடத்தை வலுவாக பதிவு செய்திருக்கிறார், இதனால் தற்போது பிளேயிங் லெவனில் விளையாடி வரும் ஒரு முக்கிய வீரருக்கு உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது எனலாம்.
அதாவது, ஷ்ரேயாஸ் ஐயர் முதிர்ச்சியான ஆட்டம் என்பது அணிக்கு தேவையான ஒன்றாகும். கில் - ரோஹித் - விராட் ஆகியோருக்கு பின் அவரின் வழக்கமான 4ஆவது இடத்தில் ஷ்ரேயாஸ் களமிறங்குவார்.
மேலும், கே.எல். ராகுல் 5ஆவது இடத்தில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகிறார், அவர் தான் பிரதான விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார்.
எனவே, பேட்டிங் ஆர்டரில் கில், ரோஹித், விராட், ஷ்ரேயாஸ், ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரே இடம்பெற வாய்ப்புள்ளது. இதனால், ஆசிய கோப்பையில் இருந்து பிளேயிங் லெவனில் தொடர்ந்து விளையாடி வரும் இஷான் கிஷனுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது தற்போதைய சூழலில் அரிதிலும் அரிதாகிவிட்டது.
இஷான் கிஷன் விளையாடாவிட்டால் முதல் ஆறு வீரர்களில் யாருமே இந்திய அணிக்கு இடதுகை வீரர் என்று யாருமில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான முதல் போட்டியில் இருந்து பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கும் இஷான் கிஷன் (82, 33, 5, 23*, 18 - கடைசி 5 ஓடிஐ இன்னிங்ஸ்) மிடில் ஆர்டரில் தன்னால் பொறுப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
எனினும், முன்னர் கூறியது போல் ஷ்ரேயாஸா அல்லது இஷானா என்று பார்க்கும்போது அனுபவத்தையும், முதிர்ச்சியையும் முதன்மையாக வைத்து டிராவிட் - ரோஹித் கூட்டணி ஷ்ரேயாஸையே அணியில் எடுப்பார்கள்.
எனவே, உலகக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டால் ஒழிய இஷான் கிஷன் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. இருப்பினும், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என பேக்-அப் பேட்டர்கள் வலுவான மனநிலையில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் சிறப்பாகும்.