போட்டிகள் முதல் விளம்பரங்கள் வரை - இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்
கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக செல்லும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்திய அணியை மறுகட்டமைப்பு செய்யும் விதமாக, கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, தேசிய அணியில் இடம்பெற தகுதி பெறுவதற்காக வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து வீரர்களும் அணியுடன் மட்டுமே போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் தொடருக்கான சுற்றுப்பயணத்தின் போது வீரர்கள் தனிப்பட்ட விளம்பரம் உள்ளிட்ட படப்பிடிப்புகளில் ஈடுபடக் கூடாது, பிசிசிஐ-யின் படப்பிடிப்பு மற்றும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் பங்கேற்க வேண்டும்.
மேலும் வீரர்கள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்காக செல்லும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஏதேனும் தவிர்க்க முடியாத சூழலில் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வு குழு தலைவரிடம் முன் அனுமதி பெற்ற பிறகே குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
45 நாட்களுக்கு மேலான வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தின் போது வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீரர்களுடன் 2 வாரங்கள் மட்டும் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதுடன், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் இழந்தது.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் கோலியின் மனைவி மற்றும் கே.எல். ராகுலின் மனைவி தொடர் முழுக்க அவர்களுடன் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தொடர் தோல்விக்குப் பிறகு தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசி வந்த நிலையில், பிசிசிஐ புதிய விதிகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.