ஆஷஸ் தொடரில் இரண்டு அணிகளுக்கு அபராதம் விதித்தது ஐசிசி
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல்போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல்போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது.
கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 7 ரன்களுடன் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. இதில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 273 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 92.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ரன்கள் எடுத்து தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது.
இந்நிலையில், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொண்டதற்காக இரு அணிகளுக்கும் போட்டி கட்டணத்திலிருந்து தலா 40 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் தலா இரண்டு கரும்புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.
துளியும் வருத்தமில்லை - தொடர்ந்து இதேபோல செயற்படுவோம் - பென் ஸ்டோக்ஸ்!
உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியின் புள்ளிப்பட்டியலில் இரு அணிகளுக்கும், பின்னடைவை ஏற்படுத்துவதாக இது அமைந்துள்ளது. கடந்த ஜூன் 16-ம் தேதி முதல் (June 16, 2023 to June 2025) வரும் ஜூன் மாதம், 2025 வரை நடைபெறவுள்ள மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முடிவில், யார் அதிக புள்ளிகள் பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
இதன் முதல் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில், முதல் போட்டியிலேயே இரண்டு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளை இழந்துள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுக்கு பதிலாக 10 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி மைனஸ் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் உள்நாட்டில் 3 தொடர், வெளிநாட்டில் 3 தொடர் என்ற அடிப்படையில் 6 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. மொத்தம் 27 தொடர்களில் 68 டெஸ்ட்கள் உள்ளன.