"அஸ்வெசும" இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15-30 வரை
முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலதிகமாக, இரண்டாம் கட்டத்திற்கு மேலும் 450,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

“அஸ்வெசும” நலத்திட்ட உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15 முதல் 30 வரை நடத்தப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலதிகமாக, இரண்டாம் கட்டத்திற்கு மேலும் 450,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதில், நலத்திட்ட உதவிகள் வழங்க தகுதியானவர்களை அடையாளம் காணும் பணி, இம்மாதத்திற்குள் முடிக்கப்பட உள்ளதாக, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
மொத்தம் 1,854,000 நபர்கள் “அஸ்வெசும” திட்டத்தின் முதல் கட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர், இந்த கட்டத்திற்காக அரசாங்கம் ரூ.58.5 பில்லியன் ஒதுக்கியுள்ளது. முதல் கட்டத்தின் போது தவறியவர்கள் அல்லது விண்ணப்பிக்க முடியாமல் போனவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க நலன்புரி நன்மைகள் சபை வாய்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின்படி நடைமுறைப்படுத்தப்படும் “அஸ்வெசும” நலன்புரி உதவித்தொகை, இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் ஏழ்மையான நான்கு சமூகப் பிரிவுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலும், ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழமை போன்று தொடரும்.
களத் தரவு சேகரிப்பின் செயல்திறனை மேம்படுத்த, நலன்புரி நன்மைகள் சபை புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் புகைப்படங்கள் எடுப்பது, இடம் தொடர்பான தரவு மற்றும் குரல் பதிவு போன்ற அம்சங்கள் உள்ளன.
இதன்படி, மொபைல் ஆப் மூலம் தகவல் சேகரிப்பை முன்னோடி திட்டமாக கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.