பெருந்தோட்ட பகுதிகளில் கடமையை சரிவர செய்கின்றார்களா? ஜீவன் கேள்வி
வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும்.

பெருந்தோட்ட பகுதிகளுக்கு கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சரியான முறையில் விஜயம் மேற்கொண்டு கடமையாற்றுகின்றார்களா? அவர்கள் தங்கள் கடைமைகளுக்காக எத்தனை முறை வருகை தந்துள்ளார்கள்? - என, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற அமர்வில் புதன்கிழமை (05) கேள்வியெழுப்பினார்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தொடர்பான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2025 - குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்.
தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை மாத்திரம் வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்காமல் வெளியிடங்களில் தொழில் புரிந்து குறித்த தோட்டத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மலையகத்தில் எல்லை நிர்ணயம் செய்யும்போது பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களையும் சரியான முறையில் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தோட்டபுற வைத்தியசாலைகளை அரசாங்க வைத்தியசாலைகளாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன், தோட்ட சிறுவர் பாராமரிப்பு நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளிலும் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.