பிரித்தானியாவின் புதிய திட்டம்: குடும்பங்களின் மளிகைச் செலவு அதிகரிக்கும் அபாயம்
நான்கு பேர் கொண்ட குடும்பம் வருடத்திற்கு சராசரியாக 312 பவுண்டு கூடுதல் செலவினைச் சந்திக்க வேண்டியிருக்கும் என NimbleFins வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.
பிரித்தானியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள Extended Producer Responsibility (EPR) திட்டம், பொதுமக்களின் மளிகைச் செலவுகளை உயர்த்தக்கூடும் என Aquapak நிறுவனம் எச்சரித்துள்ளது. 2025 அக்டோபரில் அமுலுக்கு வந்த இந்த திட்டத்தின் கீழ், பேக்கேஜிங் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அவர்கள் பயன்படுத்தும் பொருட்களின் வகையை அடிப்படையாகக் கொண்டு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த திட்டத்தில் Red, Amber, Green (RAG) என்ற முறையின் மூலம் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதிகமாக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களுக்கு குறைந்த கட்டணமும், மறுசுழற்சி செய்ய இயலாத அல்லது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களுக்கு அதிக கட்டணமும் விதிக்கப்படுகிறது. ஆனால், தெளிவான வரையறைகள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதால், பல நிறுவனங்கள் தங்களின் கூடுதல் செலவுகளை நேரடியாக நுகர்வோரிடம் மாற்றி வருகின்றன என Aquapak குற்றம்சாட்டியுள்ளது.
இதன் விளைவாக, ஒரு நான்கு பேர் கொண்ட குடும்பம் வருடத்திற்கு சராசரியாக 312 பவுண்டு கூடுதல் செலவினைச் சந்திக்க வேண்டியிருக்கும் என NimbleFins வெளியிட்ட ஆய்வு தெரிவிக்கிறது. தற்போதைய நிலையில், ஒரு குடும்பம் வாரத்திற்கு சுமார் 120 பவுண்டு மளிகைச் செலவாகச் செலவிடுகிறது. புதிய EPR கட்டணங்களின் தாக்கம் காரணமாக, இந்தச் செலவு சுமார் 0.5 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என Bank of England கணித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் EPR திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும், அதன் நடைமுறையில் உள்ள குழப்பங்கள் மற்றும் செலவுப் பாரம், இறுதியில் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவுகளை உயர்த்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.



