கிழக்கு ஆளுநர் நியமனம் குறித்து இங்கிலாந்தில் உரையாற்றிய அண்ணாமலை!

மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை, புதிய கவர்னராக நியமித்து உள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜுன் 28, 2023 - 14:55
கிழக்கு ஆளுநர் நியமனம் குறித்து இங்கிலாந்தில் உரையாற்றிய அண்ணாமலை!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். 

இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், “மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை, புதிய கவர்னராக நியமித்து உள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என உரையாற்றியுள்ளார். 

இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அண்ணாமலை, “இந்தியாவும் இலங்கையும் மிகத் தொன்மையான நாகரிகத் தொடர்பு உடையவை. 1987ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஏற்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை முழுவதுமாக நிறைவேற்றப்படவில்லை. 

“2009ஆம் ஆண்டு, வரலாற்றிலேயே மிகத் துயரமான ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கியப் பொறுப்பு, அன்றைய காங்கிரஸ் அரசு. தனது கடமைகளில் இருந்தும், இலங்கைப் போரைத் தடுக்க வேண்டிய பொறுப்புகளில் இருந்தும் தவறியது காங்கிரஸ் கட்சி செய்த மன்னிக்க முடியாத தவறு.

“2014ஆம் ஆண்டுக்குப் பிறகே, பிரதமர் மோடி, இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையை உருவாக்கினார். இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வரலாற்றுக் கடமை இந்தியாவுக்கு உள்ளது என்பதை பிரதமர் மோடி மனமார உணர்ந்திருந்தார். 

“கடந்த 9 ஆண்டுகளில், இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இந்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம். இலங்கையின் வட,கிழக்கு பகுதி மற்றும் மத்திய பகுதிகளில், இந்திய அரசு தமிழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. 

“கொழும்புடன், யாழ்ப்பாணத்தை இணைக்கும் ரெயில் போக்குவரத்து அமைத்து கொடுத்திருக்கிறது மோடி தலைமையிலான அரசு. காரைக்கால் காங்கேசன் துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்க இருக்கிறது. 

“ஈழத்தில் குறைந்து கொண்டிருக்கும் இந்து சமய மக்கள்தொகை. மிகவும் அபாயகரமான விகிதத்தில், இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. 

“புவியியல் மாற்றம், இலங்கை வடகிழக்கு பகுதியின் கலாசாரத்தைப் பாதிக்கும். பாதகமான விளைவாகும். மலையகப் பகுதியில் இருந்து செந்தில் தொண்டைமான் என்ற ஒரு தமிழரை, புதிய கவர்னராக நியமித்து உள்ளனர். அவரது நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது

“இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கும் 13ஆம் சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதே இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்று பிரதமர் மோடி தனது இலங்கைப் பயணத்தின்போது வலியுறுத்தினார். 

“தமிழக பா.ஜ.க. சார்பிலும், இலங்கையில் நிரந்தர தீர்வுக்காக மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.” என உரையாற்றினார். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!