சபையில் உரையாற்ற எனக்கு உரிமை இல்லையா? ஆவணத்தை பறித்து சென்றனர் - சஜித் குற்றச்சாட்டு
"என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? ”

இன்றைய தினம் தான் பாராளுடன்றில் முன்வைத்த விசேட கூற்றின் விவரங்கள் அடங்கியிருந்த கோவையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பறித்துச் சென்றதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில் இன்று (21) குறிப்பிட்டார்.
நாட்டை வங்குரோத்து செய்ய உழைத்தவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ராஜபக்ஷர்களிடம் இருந்து நட்டத்தை மீட்பீர்களா? என்றும் பாராளுமன்றத்தில் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.
கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பாடசாலை மாணவர்களும் கலரியில் இருக்கின்றனர். ஆகையால், தொடர்ந்தும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சபைக்குள் இனி இதனை செய்ய தடை... சபாநாயகர் அதிரடி அறிவிப்பு
இந்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார வீடியோ எடுத்தார். அவ்வாறு வீடியோ எடுக்க வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நளின் பண்டாரவிடம் கேட்டுக்கொண்டார்.
ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியை முன்வைத்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்க்கட்சித் தலைவரை அணுகினர்.
இதன்போது, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மற்றும் ஏனைய சேவிதர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் வந்து அவரைப் பாதுகாத்தனர். இதையடுத்து அவையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மீண்டும் 11.14க்கு ஆரம்பித்தார்.
ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு : சஜித்தின் உரையால் சூடாகிய சபை... 5 நிமிடங்கள் ஒத்திவைப்பு
அப்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத் நிஷாந்த அபகரித்தார். அதனை, சமர விக்ரமவிடம் கொடுத்தார். அத்தனையும் பிரதமர் முன்னிலையிலேயே நடந்தது.
என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? ” என்றும் வினவினார்.