வவுனியாவில் மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்
தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று அந்த ஆசிரியரிடத்தில் கேட்டமைக்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் நேற்று (21) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, அப்பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
தன்னை ஏன் அடிக்கிறீர்கள் என்று அந்த ஆசிரியரிடத்தில் கேட்டமைக்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.
எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாத நிலையில், அதிக மன அழுத்ததிற்கு உள்ளான மாணவன் நேற்று முன்தினம் (20) ஒரு கடிதத்தை தனது வீட்டில் எழுதி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தை கண்ட பெற்றோர் மாணவனை விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களை காட்டியுள்ளார்.
தொடர்ந்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் மாணவன் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலமை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் மாணவனின் தந்தையால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.