யாழில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி மரணம்
அந்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டிச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேற்படி நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை உதைந்து, வீழ்த்தியதில் அந்த நபர் மின்கம்பத்தில் மோதி மரணித்தார் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.

யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் ஒருவர் மின்கம்பத்தில் மோதுண்டு மரணித்துள்ளார்.
கிளிநொச்சி மின்சார சபையில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த செல்வநாயகம் பிரதீபன் என்ற 41 வயதான நபரே இவ்வாறு மரணித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றிவு (10) இடம்பெற்றது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான நிலைமை ஏற்பட்டது.
பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர்.
இதன்போது அந்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டிச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மேற்படி நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை உதைந்து, வீழ்த்தியதில் அந்த நபர் மின்கம்பத்தில் மோதி மரணித்தார் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
உயிரிழந்தவரின் சடலம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தார்களா என்பது தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.