ஹோட்டலாக மாறுகிறதா காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட  தபால் நிலையம்?

நுவரெலியாவுக்கு ஏராளமான இந்தியர்கள் வருகை தருகின்றனர். இராமாயணத்துடன் தொடர்புபட்டுள்ள சீதா எலியா, இந்திய சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகும்

நவம்பர் 8, 2023 - 14:11
நவம்பர் 8, 2023 - 14:14
ஹோட்டலாக மாறுகிறதா காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட  தபால் நிலையம்?

காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை ஹோட்டல் ஒன்றாக மாற்றுவதற்கு இந்தியாவின் தாஜ் குழுமம் முன்மொழிந்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இடம்பெற்ற நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, ​​இந்த விடயம் முன்வைக்கப்பட்டதுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை தபால் அதிகாரிகளை திட்டங்களை நடைமுறைப்படுத்த தவறியதால் கடுமையாக சாடினார். 

நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன், இந்த பிரேரணைக்கு தபால் தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், தபால்துறை அமைச்சராகவும் இருக்கும் குணவர்தன, ஹோட்டல் திட்டமானது மிகவும் பொருளாதார அர்த்தமுள்ளதாக இருப்பதால் தாம் ஆதரவளிப்பதாகக் கூறினார். 

மேலும், கட்டடத்திற்கு அதிக பராமரிப்பு தேவை என்றும், தபால் துறையிடம் அதற்கான நிதி இல்லை என்றும் அவர் கூறினார்.

“நுவரெலியாவுக்கு ஏராளமான இந்தியர்கள் வருகை தருகின்றனர். இராமாயணத்துடன் தொடர்புபட்டுள்ள சீதா எலியா, இந்திய சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாகும்," என குணவர்தன கூறினார்.

இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி நேற்று (07) நள்ளிரவு  முதல் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!