வெற்றி மனநிலையுடன் களமிறங்கும் இலங்கை அணி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி வெற்றி மனநிலையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி சிட்டகொங் நகரத்தில் இன்று (13) நடைபெறவுள்ளது.
இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி வெற்றி மனநிலையுடன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது.
ஒரு நாள் போட்டியின் சம்பியன்களுக்கு வழங்கப்படும் வெற்றிக்கிண்ணம் இரு அணிகளின் தலைவர்கள் தலைமையில் நேற்று (12) வெளியிடப்பட்டது.
ஒரு நாள் போட்டிக்கான இலங்கை அணி நேற்று பெயரிடப்பட்டதுடன், வழமை போன்று குசல் மெண்டிஸ் கேப்டனாகவும், சரித் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியில் அசித பெர்னாண்டோ மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோருக்கு பதிலாக லஹிரு குமார மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இதுவரை 54 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.
அதில் இலங்கை 42 போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளதுடன், பங்களாதேஷ் 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.
பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை இதுவரை பங்களாதேஷில் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது, அதில் இலங்கை 16 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக வங்கதேசம் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சிட்டகொங் மைதானத்தில் 18 வருடங்களின் பின்னர் இலங்கை அணி ஒரு நாள் போட்டியில் இணையவுள்ளமையும் விசேட அம்சமாகும்.