அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார் ரொஷான் ரணசிங்க
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பதவிகளில் இருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து தமக்கு கடிதம் கிடைத்துள்ளதாகவும், தனது அனைத்து அமைச்சுப் பதவிகள் மற்றும் பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தான் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்று (27) காலை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி ரணசிங்க, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தமக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு ஜனாதிபதியும் ஜனாதிபதி செயலக பிரதானியான சாகல ரத்னாயக்க ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
"இது அரசியலில் ஒரு புதிய பிளவு, அதில் என் வாழ்க்கை தொலைந்து போகலாம். நான் எங்கு வேண்டுமானாலும் கொல்லப்படலாம், அது நாளையோ, இன்றோ அல்லது மறுநாளோ, எனக்குத் தெரியாது, ஆனால் இதற்கு ஜனாதிபதியும் சாகல ரதாயக்கவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இவற்றை ஹன்சார்டில் இருந்து விலக்க வேண்டாம்” என ரணசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி படு தோல்வியடைந்த நிலையில் வெளியேறியதை அடுத்து, ரொஷான் ரணசிங்க மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி) மற்றும் அதன் தலைவர் ஷம்மி சில்வாவுடன் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகக் குழுவை நீக்கிய, ரணசிங்க இடைக்காலக் குழுவொன்றை நியமித்திருந்தார்.
ஏழு பேர் கொண்ட இடைக்காலக் குழுவின் தலைவராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டார்.
ஆனால், அரசாங்கத்தின் தலையீடு உள்ளதாக தெரிவித்து ICC உடனடியாக இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்தியது. இதனையடுத்து, ஷம்மி சில்வா இடைக்கால குழுவுக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றிருந்தார். (News21.lk)