“யுக்திய” சுற்றிவளைப்பு: மேலும் 955 சந்தேக நபர்கள் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “யுக்திய” என்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (23) காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 633 சந்தேக நபர்களும், குற்றவியல் திணைக்களத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 322 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளனர்.
இதையும் படிங்க : ஜனவரி முதல் 2000 ரூபாய் விசேட கொடுப்பனவு
போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 633 சந்தேக நபர்களில் 7 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போதைக்கு அடிமையான 17 பேர் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 28 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.