மாலைத்தீவு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை மீன்படி கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் 5 இலங்கையர்களுடன் கைது செய்யப்பட்ட ‘அவிஷ்க புத்தா’ மீன்பிடிக் கப்பலில் 355 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 12, 2025 - 06:48
மாலைத்தீவு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சிக்கிய இலங்கை மீன்படி கப்பல் தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு  கடற்பரப்பில் 5 இலங்கையர்களுடன் கைது செய்யப்பட்ட ‘அவிஷ்க புத்தா’ மீன்பிடிக் கப்பலில் 355 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 297.3 கிலோகிராம் ஐஸ் மற்றும் 58.6 கிலோகிராம் ஹெராயின் அடங்கும்.

நவம்பர் 07 ஆம் திகதி மாலைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை மீன்பிடிக் கப்பலான ‘அவிஷ்க புத்தா’, மாலைத்தீவு தேசிய காவல்படையின் கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டது.

நவம்பர் 09 ஆம் திகதி இந்தக் கப்பல் மாலைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது, மேலும் இது தொடர்பாக மாலைத்தீவு பொலிஸார் பல தகவல்களை வெளிப்படுத்தினர். அதன்படி, அந்நாட்டு நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட உத்தரவின்படி, கடந்த 10 ஆம் திகதி பொலிஸார் மீன்பிடிக் கப்பலில் சிறப்பு சோதனை நடத்தினர்.

மாலைத்தீவு பொலிஸார் கூறுகையில், ‘அவிஷ்க புத்தா’ மீன்பிடிக் கப்பலில் 24 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெராயின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை, அந்நாட்டு பொலிஸார், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலஸார் ஆகியோரின் கூட்டு விசாரணையைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

கப்பலில் இருந்த ஐந்து இலங்கையர்களும் 28, 34, 39, 42 மற்றும் 63 வயதுடையவர்கள்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக பணியாற்றி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இராஜதந்திர மட்டத்தில் விவாதங்கள் நடந்து வருகின்றன. மாலைத்தீவு கடலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் இது என்று மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடி படகுகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!