இருவேறு விபத்துகளில் 2 குழந்தைகள் பலி: மிரிஹான, ஹெட்டிபொல சம்பவங்கள்

நேற்று நடந்த இருவேறு விபத்துகளில் மிரிஹானவில் 5 வயது சிறுவனும், ஹெட்டிபொலவில் 12 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளனர். நீச்சல் குளத்தில் மூழ்கி ஒரு சிறுவனும், மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு சிறுமியும் பலியாகியுள்ளனர். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒக்டோபர் 9, 2025 - 11:27
இருவேறு விபத்துகளில் 2 குழந்தைகள் பலி: மிரிஹான, ஹெட்டிபொல சம்பவங்கள்

மிரிஹான மற்றும் ஹெட்டிபொல பகுதிகளில் நேற்றுப் புதன்கிழமை (08) நடந்த இருவேறு விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 

நுகேகொடவில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் மூழ்கி, 05 வயது சிறுவன் ஒருவன் நேற்று மாலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் தகவலின்படி, பாடசாலை மாணவர்கள் குழுவுடன் ஓர் ஆசிரியருடன் நீச்சல் பயிற்சியாளரின் கீழ், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​அந்தக் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த குழந்தை, நுகேகொடவைச் சேர்ந்தவர். சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேவேளை, ஹெட்டிபொலவில் உள்ள திவுல்வெவ-பொரலுவெவ வீதியில் நேற்று பிற்பகல் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரின் தகவலின்படி, ஒரு வளைவுக்கு அருகில் ஒரு மோட்டார் சைக்கிள் மெதுவாகச் சென்றுள்ளது. அப்போது பின்னால் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

பின்னால் பயணித்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், எதிர்திசையில் பயணித்த லொறி மோதியதில் அவரும், அவருக்குப் பின்னால் இருந்த சிறுமியும் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்த இருவரையும், ஹெட்டிபொல வைத்தியசாலையில் அனுமதித்ததில், மதுல்ல பகுதியைச் சேர்ந்த சிறுமி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பில் ஹெட்டிபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!