சம்பூர் கைதுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என YJA கோரிக்கை
ஆணைக் குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,

திருகோணமலை, சம்பூர் பகுதியில் கஞ்சி விநியோகித்ததாக கூறி நான்கு பேர் மோசமான முறையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிடம், இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் (The Young Journalists Association of Sri Lanka) கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.
ஆணைக் குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,
“திருகோணமலை மாவட்டத்தில், சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர்ந்து கஞ்சி விநியோகித்தவர்கள் சிலர் கடந்த 12 ஆம் திகதி இரவு வேளை சம்பூர் பொலிஸார் எனக் கூறப்படும் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள், தமது இறந்த உறவுகளை நினைவு கூர்ந்து கஞ்சி விநியோகம் செய்த பின்னர் இரவு வேளையில் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ள பொலிஸார் எனக் கூறிக்கொண்ட குழுவினரால் பலாத்காரமாக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சில பெண்களை மிக கொடூரமாகவும் கெளரவக் குறைவாகவும் நடாத்தும் விதம் தொடர்பிலும் இதன்போது ஊடகங்கள் அறிக்கை இட்டிருந்தன.
கஞ்சி விநியோகிக்க முன்னர் அதனை தடை செய்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவொன்றினையும் பெற்றிருந்த நிலையில், இவ்வாறான நினைவேந்தல்களை தடுத்து கடந்த காலங்களிலும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு ' நினைவு கூர்தல் உரிமையை ' உறுதி செய்யுமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ள பின்னணியிலேயே பொலிசார் இவ்வாறான நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று அமைதியான நினைவேந்தல்களை தடுத்து வருகின்றனர்.
இந்த பரிந்துரைகளை மதிக்காமல் செயற்பட்டு நினைவேந்தல்களை தடுக்கும் பொலிஸார், நேற்று கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.சி.சி.பி.ஆர். எனும் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றமிழைத்துள்ளார்களா என விசாரிப்பதாக கூறி, அவர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
நினைவு கூர்தல் என்பது அனைவருக்கும் உரித்தான உரிமை என்பதுடன் தெற்கிலும் பல்வேறு நினைவேந்தல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறும் நினைவேந்தல்களுக்கு பொலிஸார் இவ்வாறு தடை ஏற்படுத்துவதானது அரசு தலையீடு செய்து ' நினைவு கூர்தல் உரிமையை' தடுப்பதாகும்.
இது அரசின் நல்லிணக்கம் தொடர்பிலான தூர நோக்கு எவ்வாறு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
30 வருட யுத்தம் ஒன்று நடந்த நாட்டில் இவ்வாறு நினைவு கூர்தலுக்கு கூட இடமளிக்காது பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்துகொள்வதன் ஊடாக நியாயம், நல்லிணக்கம், உண்மையை கண்டறிதல் மட்டுமன்றி பாதிக்கப்பட்டவர்களின் சாதாரண உரிமைகளைக் கூட அரசு மரியாதை அளிக்கவில்லை என்பதை காட்டுகின்றது.
அவ்வாறான நிலையில் பின்வரும் கோரிக்கைகளை இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கமாகிய நாம் கோரி நிற்கின்றோம்.
- சம்பூர் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை ஒன்றினை ஆரம்பிக்குமாறும், இலங்கை பொலிஸும் அதன் உத்தியோகத்தர்களும் அரசியலமைப்பின் 10,11,12.1,12.2,12.3,13.1,13.5,14.1 அ, 14.1 ஆ,14.1 இ, 14.உ மற்றும் 14.1 ஊ ஆகிய உறுப்புரைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படைகளை மீறியுள்ளதாக தீர்மானிக்கவும்.
- அடிப்படை உரிமைகளை மீறிய அதற்கு உதவி ஒத்தாசை புரிந்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவுக்கும் பரிந்துரைக்கவும்.
- பெண்களை கொடூரமாக, அவமானப்படுத்தும் விதமாக நடத்திய மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை அளித்த அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபருக்கு பரிந்துரை செய்யவும்.
- வேறு பகுதிகளில் நடக்கும் நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் தடை ஏற்படுத்துவதை தவிர்க்க பொலிஸ் மா அதிபருக்கு பொருத்தமான பரிந்துரைகளை ஆக்கவும்.
- இதற்கு முன்னர் ஆணைக் குழு அளித்த பொதுவான பரிந்துரைகளை பின்பற்றாமை தொடர்பில் உடனடியாக ஆராயவும்.
- நினைவு கூர்தல் உரிமையை உறுதி செய்யும் விதமாக ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைக்கவும்.”
என இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.