வெனிசுலா 30–50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்: டிரம்ப்

அந்த எண்ணெய் தற்போதைய சந்தை விலையில் விற்கப்படும் என்றும், அதனால் கிடைக்கும் பணம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 7, 2026 - 15:42
வெனிசுலா 30–50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும்: டிரம்ப்

வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொள்ளும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அந்த எண்ணெய் தற்போதைய சந்தை விலையில் விற்கப்படும் என்றும், அதனால் கிடைக்கும் பணம் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்த தொகை வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்றும் டிரம்ப் விளக்கினார். வெனிசுலா தொடர்பான நிலவரங்களைப் பற்றி எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வெள்ளை மாளிகை ஏற்பாடுகள் செய்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த சந்திப்பில் Exxon, Chevron, ConocoPhillips உள்ளிட்ட முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க இராணுவம் கைது செய்த பின்னர், வெனிசுலாவை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். குறிப்பாக, வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாத நடுப்பகுதியில் இருந்து அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதித்ததன் காரணமாக, வெனிசுலாவின் மில்லியன் கணக்கான எண்ணெய் பீப்பாய்கள் கப்பல்களில் முடங்கிய நிலையில் உள்ளன. அவற்றில் ஒரு பகுதி சீனாவுக்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது. ஆனால், அமெரிக்காவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், சீனாவுக்கு செல்ல வேண்டிய அந்த எண்ணெய் அமெரிக்காவுக்குத் திருப்பிவிடப்படலாம் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளாக வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடாக சீனா இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டிலிருந்து வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!