கயிற்றுப் பாலத்தை இருபுறமும் வெட்டவே பார்க்கிறார்கள் - ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் தற்போதைய அரச வருமானத்தில் 200 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரி இழப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆனால், இழக்கப்படும் வரியை எவ்வாறு மீள பெற்றுக்கொள்ள போகிறார்கள் என்ற தெளிவில்லை என கூறியுள்ளார்.
மாவனல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு உரையாற்றுகையில், ”தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் தற்போதைய அரச வருமானத்தில் 200 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும்.
இழந்த வருமானத்தை எவ்வாறு மீள பெற்றுக்கொள்வது என்பது பற்றி விஞ்ஞாபனத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கயிற்றால் உருவாக்கப்பட்டுள்ள பாலத்தை ஒருபுறம் மட்டுமின்றி இருபுறமும் வெட்ட தேசிய மக்கள் சக்தி முயற்சித்து வருகிறது.
வருமானத்தை குறைத்து செலவை அதிகரிப்பது எப்படி எனத் தெரியவில்லை. அந்த கணிதம் தெரியாவிட்டால், பொருளாதாரம் தெரியவில்லை என்றால் இவர்கள் கயிற்றுப் பாலத்தை இருபுறமும் வெட்டவே பார்க்கிறார்கள்.
அவ்வாறு கயிற்றுப் பாலம் இருபுறமும் வெட்டப்பட்டால் ஆற்றின் நடுவில் தான் மக்கள் வீழ்வார்கள். ஆனால், நாம் இந்த கயிற்றுப் பாலத்தில் பயணித்து ஸ்திரமான பொருளாதாரத்தை உருவாக்க பார்க்கிறோம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தை முழுமையாக வாசித்துள்ளேன். தேர்தலுக்கு முன்னர் அதனை மக்களும் வாசிக்க வேண்டும்.” என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.