வற் வரி: 'அரசாங்கம் கல்வியை அழிக்க விரும்புகிறதா?'

தற்போது பாடசாலை வேன் சேவையை வழங்குவோர் பெப்ரவரி மாதம் பாடசாலை ஆரம்பித்தவுடன் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக தெளிவாக அறிவித்துள்ளனர்.

ஜனவரி 4, 2024 - 16:09
வற் வரி: 'அரசாங்கம் கல்வியை அழிக்க விரும்புகிறதா?'

வற் வரி: புத்தாண்டு தினத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ள வற் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைபடும் அபாயம் இருப்பதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், கல்வித்துறைக்கு வரி விதிக்க வேண்டாம் என அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அரசாங்கம் அதனை கருத்திற்கொள்ளாது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வலியுறுத்தினார்.

"தற்போது பாடசாலை வேன் சேவையை வழங்குவோர் பெப்ரவரி மாதம் பாடசாலை ஆரம்பித்தவுடன் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக தெளிவாக அறிவித்துள்ளனர்."

அனைத்து பாடசாலை உபகரணங்களுக்கும் வற் வரி விதிக்கப்படுவதால் மக்கள் எவ்வாறு வாழ்வார்கள் என சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் மேலும் கேள்வி எழுப்பினார்.

"பெற்றோருக்கு சமையல் எரிவாயுவிலிருந்து கொள்வனவு செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் 18 சதவீத வரியை விதித்து பிள்ளைகளின் அப்பியாசப் கொப்பிகள் முதல் அனைத்திற்கும் 18 சதவீத வரியை விதித்து பாதணி, முதல் புத்தகப் பை வரை வரியை விதித்து போக்குவரத்திற்கும் கட்டணத்தை அதிகரித்த பின்னர் எப்படி வாழ்வது??"

நாட்டில் வறிய பிள்ளைகளின் கல்வியை அழிப்பதே அரசாங்கத்தின் நோக்கமா என தொழிற்சங்க தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"அரசாங்கத்திற்கு கல்வி அமைப்பை நடத்த விரும்புகிறதா? அல்லாவிடின் இந்த நாட்டின் கல்வி முறைமையில் சாதகமற்ற நிலையிலுள்ள, எதுவும் இயலாத பிள்ளைகளின் கல்வியை அழிக்க விரும்புகிறதா?"

வரிச்சுமை 18 சதவீதம்

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள வற் வரி திருத்தத்திற்கு அமைய 15 சதவீதமாக இருந்த வற் வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வற் வரி அதிகரிப்பு பொருந்தும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு பிள்ளைக்கு தலா 100 ரூபாய் ஒதுக்கி மேற்கொள்ளப்படும் ஊட்டச்சத்து திட்டத்திற்கு வற் வரியை உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள சவால் குறித்தும் சிரேஷ்ட ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் இந்த ஊடக சந்திப்பில் விளக்கமளித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!