உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் கேப்டன் பதவியிலிருந்து விலகும் பாபர் ஆசாம்?
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நம்பமுடியாத வெற்றியை பெற வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 8 லீக் போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நம்பமுடியாத வெற்றியை பெற வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே முன்னாள் வீரர்கள் பலரும் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின்னர் பாகிஸ்தான் கேப்டன் பதவியில் இருந்து விலக பாபர் ஆசாம் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் போதிய ஒத்துழைப்பு பாபர் ஆசாமிற்கு இல்லை என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் முன்னாள் வீரர்கள் பலரும் பாபர் ஆசாமை காட்டமாக விமர்சித்து வந்தனர்.
ஏற்கனவே கொல்கத்தா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் பாபர் அசாமுடன் நெருக்கமான இருக்கும் முன்னாள் வீரர்கள் பலரும், அவரை கேப்டன்சியில் இருந்து விலகவே அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாபர் அசாம், உலகக்கோப்பை தொடருக்கு பின் பாகிஸ்தானுக்கு திரும்பிய பின் என்ன நடக்கிறது என்பதை பார்த்து பொறுத்திருந்து முடிவு எடுக்கப்படும். ஆனால் தனது கவனம் முழுக்க இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தான் இருப்பதாக கூறினார்.