சுவிட்சர்லாந்து தீ விபத்து: 40 பேர் உயிரிழப்பு, உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணி தீவிரம்
115 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கோர சம்பவத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதினராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 115 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் சுமார் 60 பேர் சியோன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மற்றவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பனிச்சறுக்கிற்குப் பிரபலமான கிரான் மோண்டானா (Crans-Montana) நகரில் அமைந்துள்ள இந்த மதுக்கூடத்தில், புத்தாண்டு தினத்தன்று வெடிப்பு ஒன்று ஏற்பட்டதைத் தொடர்ந்து தீ மிக வேகமாகப் பரவியதாக உயிர்தப்பியவர்கள் கூறுகின்றனர். சிலர் ஜன்னலை உடைத்து தப்பியதாகவும், சம்பவத்தின் போது சூழ்நிலை மிகவும் பதற்றமானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக, சுவிட்சர்லாந்து சந்தித்த மிக மோசமான துயரங்களில் ஒன்றாக இதை புதிய ஜனாதிபதி கீ பார்மிலின் (Guy Parmelin) வர்ணித்துள்ளார். உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து நடத்தப்பட்ட சிறப்பு அஞ்சலிக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, அனைத்து மாண்டோர்களையும் அடையாளம் காண நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதனை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

