யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை நிலையங்கள் திறக்க கடும் கட்டுப்பாடுகள்!
அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை தொடர்பான அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக் கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

யாழ். மாவட்டத்தில் அழகுக் கலை நிலையங்களைப் புதிதாக திறப்பதற்கும் அழகு கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ். மாவட்ட அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா தினேஷ் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றியம், யாழ். ஊடக மையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக் கலை தொடர்பான அரச அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக் கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
“யாழ்ப்பாணம் தவிர்ந்த பிரதேசங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்து யாழ்ப்பாணத்தில் புதிய அழகுக் கலை நிலையங்கள் திறக்கப்படுவது மட்டுமல்லாமல், அழகுக் கலை சார்ந்த குறுகியகால பயிற்சிப் பட்டறைகளும் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.
“இதனால் அழகுக் கலை ஆர்வம் கொண்ட யாழ். மாணவர்களும் அழகுக் கலை நிபுணர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே யாழ். அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றியம் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
“எமது ஒன்றியத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் 120 இற்கும் மேற்பட்ட அழகுக் கலை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒன்றியமானது யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு மாவட்ட செயலகத்தின் வழிநடத்தலில் இயங்கி வருகின்றது.
“அழகுக் கலை தொழில் என்பது சருமங்கள், தோல் சார்ந்த சுகாதார விடயங்களோடு சம்பந்தப்படுவதால் உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதார பிரிவினரோடு இணைந்து அதற்கான அனுமதி வழங்கு வதில் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
“அழகுக்கலை நிலையம் ஒன்றைத் திறப்பதற்கான வியாபார அனுமதியை வழங்குகின்ற போது அந்த நிலையத்தின் உரிமையாளர் NVQ level 4 சான்றிதழைப் பெற்றிருப்பதுகட்டாயமானது. இதனைப் பரிசீலித்தே வியாபார சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்.
“எனவே, இந்த விடயங்களை அனைவரும் கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அழகுக்கலை பயிற்சி நெறிகளை நடத்துவதென்றால் வகுப்பறைக் கட்டமைப்பு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் எனவும் யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது” என்றார்.