முதலாம் தவணை இன்று முதல் ஆரம்பம்; நேரத்தில் நீடிப்பு இல்லை
இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய தவணை பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தது.

2022ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இன்று (18) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம், பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய தவணை பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு முன்னதாக தீர்மானம் எடுத்திருந்தது.
இந்த ஆண்டுக்கான பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு வரையறுக்கப்பட்ட கால அவகாசம் காணப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்தநிலையில் குறித்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, அரச பாடசாலைகளில் இந்த ஆண்டுக்கு தரம் ஒன்றில் மாணவர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனினும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.