நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் மழை அதிகரிக்கும்: வெளியான அறிவிப்பு
இதன்படி எதிர்வரும் நாட்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனைவரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இன்று (18) முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்காலிகமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ. 100க்கும் மேற்பட்ட கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தவிர, ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது 30-40 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு நீர்பாசனத் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதுடன், இன்று முதல் கிழக்கு வடமத்திய மற்றும் வடமாகாணங்களிலும் மத்திய மலையகத்தின் கிழக்கு சரிவுகளிலும் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் நாட்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அனைவரும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.