நடுவானில் உயிரிழந்த விமானி.. அந்தரத்தில் அதிர்ந்த பயணிகள்... என்ன ஆச்சு தெரியுமா?

அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பின், விமானம் சிலி நாட்டை நோக்கி பயணித்தது.

ஆகஸ்ட் 17, 2023 - 19:25
நடுவானில் உயிரிழந்த விமானி.. அந்தரத்தில் அதிர்ந்த பயணிகள்... என்ன ஆச்சு தெரியுமா?

சான்டியாகோவை தளமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு விமான நிறுவனம் 'லாட் ஆம் விமான நிறுவனம்.

இதன் வர்த்தக விமானமான LA505 அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாநில மியாமியிலிருந்து சிலிக்கு 271 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

இந்த விமானத்தை தலைமை விமானியான 56 வயதான கேப்டன் இவான் ஆண்டர் என்பவர் இயக்கினார். ஆண்டர் 25 வருடங்களுக்கும் மேல் விமானம் ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர்.

மியாமியிலிருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே விமானத்தின் டாய்லெட் அறைக்கு ஆண்டர் சென்றார். அங்கு அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

அதே நேரம், ஆண்டருக்கு அவசர கால முதலுதவி சிகிச்சையும் விமானத்தின் உள்ளே இருந்த குழுவால் கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு நினைவு திரும்பவில்லை.

இதனால் விமானம் மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமாவின் டாகுமென் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அவரை காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக மருத்துவ நிபுணர் குழு ஒன்று அந்த விமானத்தை அடைந்து அவரை பரிசோதித்து சிகிச்சையளிக்க முற்பட்டது. பரிசோதனையில் துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கெனவே இறந்திருந்தது தெரிய வந்தது.

அவரது உடல் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்ட பின், விமானம் சிலி நாட்டை நோக்கி பயணித்தது.

அவரது இறப்பு குறித்து விமான நிறுவனம் அறிவித்திருப்பதாவது:

"ஆண்டரின் உயிரை காப்பாற்ற விமானத்தின் உள்ளே அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டது. இவான் ஆண்டரின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது நீண்ட சேவையையும், அர்ப்பணிப்பையும் நாங்கள் நினைவு கூர்கிறோம். அவரது இறப்புக்கு எங்கள் வருத்தங்களை தெரிவிக்கிறோம்."

இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்தது.

விமானத்தின் உள்ளேயே எதிர்பாராதவிதமாக தலைமை விமானி உயிரிழந்ததும், விமானம் துணை விமானியால் இயக்கப்பட்டு பத்திரமாக தரையிறங்கியது சிலி நாட்டில் பேசுபொருளாகியிருக்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!