நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் - அடுத்து என்ன நடக்கும்?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

செப்டெம்பர் 24, 2024 - 13:43
செப்டெம்பர் 24, 2024 - 14:56
நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் - அடுத்து என்ன நடக்கும்?

நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படும் எனவும் டிசெம்பர் மாதத்துக்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதவிகளை தம்வசம் வைத்திருப்பார் என்றும், வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக பிரதமர் இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர்  அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும், நாடாளுமன்றத்தைக் கலைத்த பிறகு, வேட்புமனுக்கள் கோரப்படும் திகதியை ஜனாதிபதி  தீர்மானிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 10 முதல் 17 நாட்கள் கால அவகாசம் வழங்கும்.

பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், பாராளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் எப்போது கூடும் என்ற திகதியையும் அவர் அறிவிப்பார்.

இதேவேளை, இன்று இரவு அவர் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் தேசிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றால், அதிக வாக்குகளைப் பெற்ற, பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!