பாகிஸ்தானை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா
உலகக் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

உலகக் கோப்பையில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. சென்னையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி 4 வெற்றிகளையும் முதல் பேட்டிங் செய்து பெற்றது. நெதர்லாந்துக்கு எதிராக இரண்டாவது பேட்டிங் செய்து தோல்வியடைந்தது. இதைக் கருத்தில் கொண்டு பாபர் நல்ல முடிவை எடுத்தார்.
புதிய பந்தை யான்சென் கையிலெடுத்தார். ஆடுகளத்தில் ஸ்விங் இல்லை என்பதை முதல் இரு பந்துகளில் உணர்ந்த யான்சென், ஷார்ட் பந்தை யுத்தியாகக் கையாண்டார்.
கூடுதல் பவுன்ஸும் இருந்தது. என்கிடியும் ஷார்ட் பந்தைப் பின்பற்றினார். முதல் 4 ஓவர்களில் 5 ஷார்ட் பந்துகள் வீசப்பட்டன. ஐந்தாவது ஓவரில் யான்சென் வீசிய ஷார்ட் பந்தை சிக்ஸருக்கு மடக்கி அடிக்கப் பார்த்து பவுண்டரி எல்லையில் எளிதாக கேட்ச் ஆனார் ஷஃபிக்.
கடந்த ஆட்டத்தில் ஷார்ட் பந்தை சிக்ஸருக்கு அனுப்பிய ஷஃபிக்கால் இன்று சிக்ஸர் அடிக்க முடியாமல் போனதற்கான காரணம் யான்செனின் கூடுதல் பவுன்ஸ். யான்சென் பந்திலேயே மற்றொரு தொடக்க பேட்டரான இமாம் உல் ஹக் ஆஃப் ஸ்டம்ப் வெளியே வீசப்பட்ட முழு நீளப் பந்தை விளாசப் பார்த்து கேட்ச் ஆனார்.
பாபர் ஆஸமும், ரிஸ்வானும் 7-வது ஓவரிலேயே களமிறங்க நேரிட்டது. ரிஸ்வான் வந்தவுடனே அதிரடிக்கான முனைப்பைக் காட்டினார். இரண்டாவது பந்தை விளாசப் பார்த்து விளிம்பில்பட்டு தேர்ட் மேனிடம் காற்றில் சென்று பவுண்டரியை அடைந்தது. யான்செனிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதே முனைப்பைத் தொடர்ந்து வெளிப்படுத்திய ரிஸ்வான், ரிஸ்கான ஷாட்களை விளையாடினார். இவரது ஒரு சில ஷாட்கள் காற்றில் சென்றன. இந்த உலகக் கோப்பையில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய கோட்ஸி முதல் ஓவரிலேயே ஷார்ட் பந்தை வீசி ரிஸ்வானை வீழ்த்தினார். விக்கெட்டுகள் விழுந்தாலும் அவ்வப்போது நோ-பால் வீசப்பட ரன்களும் சீரான வேகத்தில் உயர்ந்தன.
சௌத் ஷகீலுக்குப் பதில் இஃப்திகார் அஹமது முன்கூட்டியே களமிறக்கப்பட்டார். பாபரும், இஃப்திகாரும் கூட்டணியைக் கட்டமைக்க முயற்சித்தார்கள். பாகிஸ்தான் அணி 20-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. தப்ரைஸ் ஷம்ஸி அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் தனது மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே இஃப்திகாரை வீழ்த்தினார்.
நிதானமாக விளையாடிய பாபர் 64 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். மேல்வரிசை பேட்டர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பேட்டிங்கின் மொத்த பொறுப்பும் பாபரின் மீது இருந்தது. ஆனால், தனது 4-வது ஓவரில் பாபரை ஆட்டமிழக்கச் செய்தார் ஷம்ஸி. பின்பக்கம் ஸ்வீப் செய்யப் பார்த்து ஆட்டமிழந்தார் பாபர். இந்த முறையும் அரை சதத்தைப் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை.
141 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்த நிலையில் ஷகீல் - ஷதாப் இணை பொறுப்புடன் ஆடத் தொடங்கியது. நடு ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் பவுமா. ஆனால், ஷம்ஸியும் மகாராஜும் அவ்வப்போது ஷார்ட் பந்துகளை வீச ரன்கள் எளிதாக வரத் தொடங்கியது.
இதனால் வேகப்பந்துவீச்சாளர்களிடம் பந்தைக் கொடுத்தார் பவுமா. அதற்கான பலனும் கிடைத்தது. 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்த ஷதாப்பை தனது வேகத்தில் வீழ்த்தினார் கோட்ஸி. இந்த இணை 71 பந்துகளில் 84 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் பேட்டிங்கில் 50 ரன்களைக் கடந்த ஒரே கூட்டணி இதுதான்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடி 49 பந்துகளில் அரை சதம் அடித்தார் ஷகீல். இவராலும் அரை சதம் அடித்தவுடன் வெகுநேரம் களத்தில் நீடிக்க முடியவில்லை. ஷம்ஸி வீசிய 43-வது ஓவரில் கட் செய்யப் பார்த்து டி காக்கிடம் 52 ரன்களுக்கு கேட்ச் ஆனார்.
வாசிம், ஷாஹீன் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தாலும் நவாஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக 24 ரன்கள் சேர்த்த பிறகே விக்கெட்டைப் பறிகொடுத்தார். இறுதியில் பாகிஸ்தான் 270 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வரிசை பேட்டர்கள் ஏமாற்றமளித்தாலும் இழந்ததாலும் ஷகீல் - ஷதாப் கூட்டணியால் சரிவிலிருந்து மீண்டது பாகிஸ்தான்.
இந்த உலகக் கோப்பையில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்திவரும் தென்னாப்பிரிக்கா, இரண்டாவது பேட்டிங்கில் முதல் வெற்றியை நோக்கி களமிறங்கியது.
சேப்பாக்கம் சுழற்பந்துக்குச் சாதகமானது என்பதால் முதல் ஓவரையே இஃப்திகாருக்குக் கொடுத்தார் பாபர். களத்தில் இடதுகை பேட்டர் டி காக் இருந்தார். ஆனால் முதல் பந்தையே வைடாக வீச, கீப்பராலும் பிடிக்க முடியாமல் பவுண்டரிக்குச் சென்றது பந்து. அதே ஓவரில் ரன் அவுட் செய்ய முயன்ற ஷதாப்பிற்கு பின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் ஸ்ட்ரெச்சர் எடுத்துவரப்பட்டாலும், களத்தை விட்டு நடந்தே சென்றார் ஷதாப்.
ஷாஹீன் அஃப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார் டி காக். தனது அடுத்த ஓவரில் ஷார்ட் ஆஃப் லெங்த் பந்தை வீச, டி காக் நேராக வசீமிடமே கேட்ச் ஆனார். பவர்பிளேயில் விக்கெட்டை வீழ்த்திவிட்டார் அஃப்ரிடி.
டி காக்குக்கு அடுத்தபடியாக நவாஸ் வீசிய 7-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி ரன் ரேட்டை உயர்த்தி வந்தார் பவுமா. 28 ரன்களை எடுத்த இவர், 10-வது ஓவரில் வாசிமின் ஷார்ட் பந்தை அடிக்க முயன்று ஷார்ட் மிட் விக்கெட்டில் கேட்ச் ஆனார். பவுன்சர்களுக்குப் பெயர்போன தென்னாப்பிரிக்க பேட்டர்களுக்கே இன்றைய ஆட்டத்தில் சவாலாக இருந்தார்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள்.
ஹாரிஸ் ராஃபின் பவுன்சரை வான் டெர் டுசன் ஹெல்மெட்டில் வாங்க, பந்து தேர்ட் மேன் வரையில் காற்றில் பறந்தது. ஆனால் நல்வாய்ப்பாக டுசன் பேட்டிங்கைத் தொடர்ந்தார். மார்கிரம் ஷார்ட் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன் ரேட்டை உயர்த்த, டுசன் கூட்டணிக்கு ஒத்துழைப்பு தந்தார். இதனால், தென்னாப்பிரிக்க அணி 15-வது ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்து ஓவருக்கு 7-க்கு மேல் பயணித்தது. வெற்றிக்குத் தேவயான ரன் ரேட் ஓவருக்கு 5-க்குக் குறைவாக இருந்தது.
ஷதாப் கானுக்குப் பதில் கன்கஷன் சப் ஃபீல்டராக உசாமா மிர் சேர்க்கப்பட்டார். இவர் 19-வது ஓவரில் அறிமுகப்படுத்தப்பட, முதல் ஓவரிலேயே வேகமான பந்து மூலம் டுசனை எல்பிடபிள்யு செய்தார். கால்களைத் தாக்கியதும், ஸ்டம்புகளைத் தகர்த்ததும் நடுவரின் முடிவாக வந்ததால், 21 ரன்களுக்கு வெறுப்புடனே வெளியேறினார் டுசன்.
உசாமா மிர்ரின் பெரிய ஃபுல்டாஸில் சிக்ஸர் விளாசிய கிளாஸென், வாசிமின் ஷார்ட் பந்தில் 10 ரன்களுக்கு வீழ்ந்தார். ஆட்டம் சமநிலையை அடைந்தது. 28 ஓவர்களில் பாகிஸ்தானை மேற்கொண்டு ஆதிக்கம் செலுத்திட அனுமதிக்காதவாறு மார்கிரமும், மில்லரும் விளையாடினார்கள். மிர் விக்கெட்டை வீழ்த்தினாலும், நிறைய தவறான பந்துகளை வீச மில்லரும், மார்கிரம் இதைப் பயன்படுத்திக்கொள்ள தவறவில்லை.
மார்கிரம் அரை சதத்தைக் கடந்தார். கூட்டணியும் படிப்படியாக உயர்ந்தது. வெற்றிக்குத் தேவையான ரன் 100-க்கு கீழ் வந்தவுடன், விக்கெட் வீழ்த்த வேண்டிய நெருக்கடி பாகிஸ்தானுக்கு எழுந்தது. மாற்றி யோசித்து இஃப்திகாரைக் கொண்டு வந்தார். சிக்ஸர் பறந்தவுடன், அஃப்ரிடி, ராஃப் என முன்னணி பந்துவீச்சாளர்களை அறிமுகப்படுத்தினார் பாபர் ஆஸம்.
பலனாக மில்லர் விக்கெட் கிடைத்தது. 29 ரன்களில் அஃப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார் மில்லர். மார்கிரம், மில்லர் கூட்டணி 69 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தது. மில்லர் விக்கெட் விழுந்தவுடன் ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாகிஸ்தான் முயற்சித்தது. யான்சென் சிறிய அதிரடியை வெளிப்படுத்தி வாசிம் ஓவரில் ஒரு பவுண்டரியும், ராஃப் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 40-க்குக் கீழ் குறைந்தது.
சிக்ஸர் விளாசியவுடனே அடுத்த பந்தை மெதுவாக வீசினார் ராஃப். யான்சென் பேக்வர்ட் பாயிண்ட்டிடம் 20 ரன்களுக்கு கேட்ச் ஆனார். யான்சென் விக்கெட்டுக்குப் பிறகு மூன்று ஓவர்களுக்குப் பவுண்டரி கொடுக்காமல் பாகிஸ்தான் பந்துவீசியது. மார்கிரமும், கோட்ஸியாவும் நிதானித்தார்கள்.
விக்கெட் தேவை என்றவுடன் 41-வது ஓவரில் உசாமா மிர்ரை அறிமுகப்படுத்தினார் பாபர் ஆஸம். இந்த முறை மார்கிரம் விக்கெட்டே கிடைத்தது. காற்றில் தூக்கிவீசி பந்தைத் திருப்பினார் மிர். மார்கிரம் பெரிய ஷாட்டுக்கு முயன்று, பேட்டில் சரியாக வாங்கவில்லை. பாயிண்ட்டில் பாபரிடம் கேட்ச் ஆனார். சதமடித்து இன்னிங்ஸை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 91 ரன்களுக்கு வெளியேறினார்.
9 ஓவர்கள் வரை மீதமிருந்ததால், இரு அணிகளுக்கும் அது பிரச்னையாக இல்லை. தென்னாப்பிரிக்காவுக்கு 21 ரன்கள் தேவை. பாகிஸ்தானுக்கு 3 விக்கெட்டுகள் தேவை என்ற நிலை இருந்தது. அடுத்த ஓவரிலேயே கோட்ஸியை வீழ்த்தினார் அஃப்ரிடி.
தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவை, பாகிஸ்தானுக்கு 2 விக்கெட்டுகள் தேவை என்ற நிலை உருவாகி ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. அஃப்ரிடியின் கடைசி இரு ஓவர்களில் சேப்பாக்கமே அஃப்ரிடிக்குச் சாதமாக அலறியது. இங்கிடியும், மகாராஜும் பெரிய ஷாட்டுக்கு முயற்சிக்காமல் பொறுமையாகவே அங்கும் இங்குமாக பந்தைத் தட்டி ஒவ்வொரு ரன்னாக எடுத்தார்கள். ஒவ்வொரு ரன்னுக்கும் கைத்தட்டல் சப்தம் எகிறியது.
5 ஓவர்களில் 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹாரிஸ் ராஃப் பந்துவீச வந்தார். இந்த ஓவரின் மூன்றாவது பந்தை கால்களுக்கு வீச, இங்கிடி லெக் சைடில் விளையாட முயற்சித்து முன்பக்க பேட்டில் வாங்கினார். ஹாரிஸ் ராஃப் அருகில் வர, ராஃப் பாய்ந்து ஒற்றைக் கையில் கேட்சை பிடித்தார். விறுவிறுப்பு மேலும் ஒரு உச்சத்தை அடைந்தது. இந்த உலகக் கோப்பையில் சுவாரசியம் இல்லை என்ற குறைக்குத் தீனிபோடும் விதமாக இந்த ஆட்டம் அமைந்தது.
கடைசி பந்தை லெங்த்தாக வீச ஷம்ஸி கால்காப்பில் வாங்கினார். எல்பிடபிள்யு கேட்டாரகள். நடுவர் தரவில்லை. ரிஸ்வான் ரெவ்யூவுக்கு வலியுறுத்தினார். பாபர் ஆஸம் ரெவ்யூ எடுக்க, ரெவ்யூவில் ஸ்டம்புகளைத் தகர்ப்பது நடுவரின் முடிவு இறுதியானது என வந்ததால் ஷம்ஸி தப்பித்தார். பாகிஸ்தானால் ரெவ்யூவை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. பந்துக்கு பந்து ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. வாசிம் வீசிய 47-வது ஓவரில் 3 ரன்கள் எடுக்கப்பட, கடைசி மூன்று ஓவர்களில் 5 ரன்கள் தேவைப்பட்டன. வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஓவர்களை நிறைவு செய்ததால், நவாஸிடம் செல்ல நேர்ந்தது. இந்த ஓவரின் இரண்டாவது பந்தை பேக்வர்ட் ஸ்கொயர் லெக்கில் பவுண்டரிக்கு விரட்டி வெற்றியை உறுதி செய்தார் மகாராஜ்.
பாகிஸ்தானின் போராட்டக் குணத்தால் கடைசி நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா, பொறுமை காத்து கடைசி விக்கெட் வரை போராடி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது அந்த அணி. தொடர்ச்சியான 4-வது தோல்வியால் 6-வது இடத்துக்கு இறங்கியுள்ளது பாகிஸ்தான்.