அமெரிக்காவில் விமானம் வெடித்து சிதறியது – நாஸ்கார் சாம்பியன் உட்பட ஏழு பேர் பலி
அவசர தரையிறங்கும் முயற்சியின் போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டி ஆண்டெனாவும் சுற்றுச்சுவரும் மீது மோதி வெடித்தது.
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில்லே பிராந்திய விமான நிலையத்தில் ஒரு தனியார் வணிக ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியதில், அதில் பயணித்த ஏழு பேரும் உயிரிழந்துள்ளனர்.
காலை 10:06 மணியளவில் புளோரிடாவை நோக்கி அந்த விமானம் புறப்பட்டது. ஆனால், சுமார் 2000 அடி உயரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விமானம் உடனடியாக திரும்பி ஸ்டேட்ஸ்வில்லே விமான நிலையத்திற்கு திரும்பியது. அவசர தரையிறங்கும் முயற்சியின் போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டி ஆண்டெனாவும் சுற்றுச்சுவரும் மீது மோதி வெடித்தது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த ஏழு பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இவர்களில் அமெரிக்காவின் ஓய்வுபெற்ற நாஸ்கார் (NASCAR) கார் பந்தய சாம்பியன் கிரெக் பிஃபிள் (55), அவரது மனைவி கிறிஸ்டினா, மற்றும் அவர்களது குழந்தைகளான ரைடர் மற்றும் எம்மா ஆகியோரும் அடங்குவர்.
இந்த பயங்கர விபத்து பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, அங்கிருந்தவர்களை பதற வைத்தது. விபத்துக்கான சரியான காரணங்கள் குறித்து கூடுதல் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.