எத்தியோப்பியா நிலச்சரிவில் இதுவரை 229 பேர் பலி! உயிரிழப்பு உயரும் அபாயம்?
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தெற்கு எத்தியோப்பியாவின் கென்சோ சச்சா கோஸ்டி மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி மண்ணில் புதைந்தனர்.
மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மண் இடுக்குகளில் சிக்கி உயிரிழந்த, 157 பேரின் சடலங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நிலச்சரிவில் பலியானோரின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு பிறகு அங்கு குவிந்த மக்கள் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 148 ஆண்கள் மற்றும் 81 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவில் இருந்து ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட போது அதில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க சென்றவர்கள் மீது இரண்டாவது முறையாக மண் சரிந்த காரணத்தால் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.