1800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்கள் பற்றி வெளியான சுவாரஸ்ய உண்மை!
சுமார் 1800 முதல் 1900 ஆண்டுகளுக்கு முந்தைய உடல்களின் டிஎன்ஏ அறிக்கையிலிருந்து அக்காலத்து பெண்கள் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

சுமார் 1800 முதல் 1900 ஆண்டுகளுக்கு முந்தைய உடல்களின் டிஎன்ஏ அறிக்கையிலிருந்து அக்காலத்து பெண்கள் எப்படி வாழ்ந்துள்ளார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி, ரோம் படையெடுப்பிற்கு முன்பு பிரிட்டனின் செல்டிக் சமூகத்தில், பெண்கள் குடும்ப உறவுகளின் மையமாகவும், சமூக வலைப்பின்னலின் முக்கிய அங்கமாகவும் திகழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தின் டோர்செட்டில் உள்ள ஒரு பண்டைய கல்லறையிலிருந்து பெறப்பட்ட டிஎன்ஏ சான்றுகள், அங்குள்ள பெண்கள் தாய்வழிச்சமூகத்திலேயே இருந்துள்ளனர் என்றும், அந்நிய ஆண்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டனர் என்றும் கூறுகின்றன.
சுமார் 100 கி.மு முதல் 200 கி.பி வரை பயன்படுத்தப்பட்ட 57 கல்லறைகளில் இருந்து பெறப்பட்ட பண்டைய டிஎன்ஏ ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கினர் ஒரே தாய்வழி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் மரபணு நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான லாரா காசிடி, "இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. ஐரோப்பிய வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலத்தில் முன்பு இதுபோன்ற நாகரீகம் கண்டறியப்படவில்லை" என்று கூறினார்.
அக்காலத்தில் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே சமூக வலைப்பின்னலில் இருந்ததாகவும், பெரும்பாலும் நிலம் மற்றும் சொத்துக்களை அவர்களே நிர்வகித்தனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லாரா காசிடி மேலும் கூறுகையில், "உங்கள் கணவர் ஒரு உறவினர் அல்லாத நபராக வருகிறார், அவர் நிலம் மற்றும் வாழ்வாதாரத்திற்காக மனைவியின் குடும்பத்தை நம்பியிருக்கிறார். இந்த முறை தாய்வழி என்று அழைக்கப்படுகிறது, இது வரலாற்று ரீதியாக அரிதானது” எனத் தெரிவிக்கிறார்.