இலண்டனில் திருடப்பட்ட £10.4 மில்லியன் மதிப்புள்ள நகைகள்: பரிசு தொகை அறிவிப்பு
வடக்கு இலண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து £10.4 மில்லியன் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த நபர் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இலண்டனில் உள்ள வீடு ஒன்றில் இருந்து £10.4 மில்லியன் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த நபர் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு இலண்டனின் செயிண்ட் ஜான்ஸ் வூட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து £10.4 மில்லியன் மதிக்கத்தக்க நகை மற்றும் £150,000 மதிப்புள்ள பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைப்பைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
20 முதல் 30 வயதுடைய வெள்ளை நிறமுடைய ஆண் ஒருவர், டிசெம்பர் 7ம் திகதி அவென்யூ ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் மாலை 5 மணி முதல் 5.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக புகுந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் இரண்டு அற்புதமான டீ பியர்ஸ் பட்டர்ஃபிளை வைர மோதிரங்கள், கேத்தரின் வாங் வடிவமைத்த அழகிய இளஞ்சிவப்பு மாணிக்கம் பட்டர்ஃபிளை காதணிகள் மற்றும் வான் கிளிஃப் & ஆர்பெல்ஸ் நிறுவனத்தின் தங்கம், வைரம், மாணிக்கம் கழுத்தணி உள்ளிட்டவை அடங்கும்.
இதனுடன் 15,000 பவுண்ட் ரொக்கம் மற்றும் ஹெர்மஸ் நிறுவனத்தின் பிரபலமான குரோக்கோடைல் கெல்லி மாடல் ஹேண்ட் பேக்குகள் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளியை கைது செய்து தண்டனை பெற்றுத் தரும் தகவலுக்கு 500,000 பவுண்ட் பரிசினை நகை உரிமையாளர் அறிவித்துள்ளார்.
மெட்ரோபொலிட்டன் பொலிஸார், திருடன் கருப்பு ஹூடி, கார்கோ பேண்ட் மற்றும் சாம்பல் நிற பேஸ்பால் தொப்பி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் பல தனித்துவமானவை என்பதால் அவற்றை எளிதில் அடையாளம் காண முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.