ரத்தக் களரியாக மாறிய ஈரான்: காமெனிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம், 217 பேர் உயிரிழப்பு
பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 217 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணவீக்கம், வேலையின்மை மற்றும் மோசமான பொருளாதார நிலைமையை எதிர்த்து ஈரானில் வெடித்துள்ள மக்கள் போராட்டங்கள், தற்போது மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த போராட்டங்களில் இதுவரை குறைந்தது 217 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் என கூறப்படுகிறது. நிலைமை எவ்வளவு பதற்றமாகியுள்ளது என்பதைக் காட்டும் வகையில், புரட்சிகர காவல்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி அரசு தொலைக்காட்சியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை போராட்டங்களில் பங்கேற்க விடக்கூடாது என்றும், அவர்கள் சுடப்பட்டால் புகார் செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆரம்பத்தில், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆனால் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கடுமையான நடவடிக்கைகள் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தின. சில நாட்களிலேயே, இந்த போராட்டங்கள் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தாண்டி, நேரடியாக ஆட்சியையே சவால் செய்யும் நிலைக்கு மாறியது.
ஈரானில் இந்த போராட்டங்கள் 2025 டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கின. முதல் 10 நாட்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், 91 நகரங்களில் இருந்து பெறப்பட்ட 453 வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் மொத்தம் 641 கோஷங்கள் பதிவாகியுள்ளன. மக்கள் தற்செயலாக அல்ல, தெளிவான அரசியல் நோக்கத்துடன் தெருக்களில் இறங்கியுள்ளனர் என்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
போராட்டங்களில் அதிகமாக கேட்கப்பட்ட முழக்கம், “இது கடைசி போராட்டம், பஹ்லவிகள் திரும்புவார்கள்” என்பதாகும். இது தற்போதைய இஸ்லாமிய குடியரசுக்கு மாற்றாக, பழைய ஷா ஆட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்துகிறது. அதற்கு அடுத்ததாக “சர்வாதிகாரி ஒழிக” என்ற முழக்கம் அதிகம் எழுந்தது. இது உச்ச தலைவர் அலி காமெனியை நேரடியாக குறிவைத்ததாக பார்க்கப்படுகிறது. “காமெனி ஒழிக”, “ஜாவித் ஷா வாழ்க”, “ரேசா ஷா, சாந்தியடையுங்கள்” போன்ற முழக்கங்களும் அடிக்கடி கேட்கப்பட்டன. மேலும், “இந்த ஆண்டு இரத்தக்களரி ஆண்டு, சையத் அலி வீழ்வார்” என்ற கோஷம் அதிகார மாற்றத்திற்கான வெளிப்படையான அழைப்பாக அமைந்தது.
இந்த போராட்டங்கள் தெஹ்ரானில் மட்டும் இல்லாமல், ஃபர்சன், அசதாபாத், கோ-செனார் போன்ற சிறிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. அரசாங்கத்துக்கும் இஸ்லாமிய குடியரசு அமைப்பிற்கும் எதிரான கோபம் நாடு முழுவதும் பரவி வருகிறது. உயிரிழப்பு செய்திகள் வெளியானதும், எதிர்ப்புக் கோஷங்கள் மேலும் வலுப்பெற்றன. இறுதிச் சடங்குகளிலும் அரசுக்கு எதிரான முழக்கங்கள் எழுந்தன.
இந்த சூழலில், ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனி, போராட்டங்கள் தொடங்கிய பிறகு முதன்முறையாக நாட்டுமக்களிடம் உரையாற்றினார். அவரது உரை அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகவும், வெளிநாடுகளுக்காக வேலை செய்யும் கூலிப்படையினரை ஈரான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் வன்முறையைத் தூண்டுவது வெளிநாட்டு ஏஜெண்டுகளின் செயல் என குற்றம்சாட்டிய காமெனி, பொது சொத்துகளை சேதப்படுத்துவதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை மகிழ்விக்க சில கலவரக்காரர்கள் முயற்சிப்பதாகவும் கூறினார்.