இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் வௌிவந்த தகவல்!
இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நேற்று (28) காலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் நேற்று (28) காலை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.
களனி ஈரியவெட்டிய பிரதேசத்தை சேர்ந்த அனுலா ரத்நாயக்க 2013 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு உதவியாளராக சென்றிருந்தார். காசா மற்றும் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பணி செய்து கொண்டிருந்த போது, தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
விவசாய கிராமமாக இருந்த இந்த பகுதிகளை கடந்த 7ம் திகதி ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலின் பின்னர், அனுலா ரத்நாயக்க காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலிய தூதரகம் சில நாட்களுக்குப் பிறகு அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. இறக்கும் போது 49 வயதான அனுலா ரத்நாயக்க இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
இஸ்ரேலிய தடயவியல் மருத்துவர்கள், அந்த உடல் அனுலாவினுடையது என்பதை உறுதிப்படுத்த அவரது உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையை கோரினர்.
பின்னர் அவரது உடலை உறவினர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டிருந்தனர். இந்நிலையில், அனுலா ரத்நாயக்கவின் இறுதி அஞ்சலி மற்றும் சமய சடங்குகளும் இஸ்ரேலில் இடம்பெற்றன.
அனுலா ரத்நாயக்க பராமரித்து வந்த இஸ்ரேலியப் பெண்ணும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் இலங்கையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் தலையீட்டில் அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி, இன்று காலை 9.45 அளவில் அவரது உடல் இஸ்ரேலில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்வில் அனுலாவின் கணவர், மகள், மகன் மற்றும் உறவினர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அனுலா ரத்நாயக்கவின் சடலம் நேற்று பிற்பகல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனையடுத்து, சடலம் களனி ஈரியவட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.