8 மணிநேர காத்திருக்க வைத்த கனடா மருத்துவமனை... புலம்பெயர்ந்த நபர் இதயநோயால் மரணம்!
மருத்துவப் பணியாளர்களிடம் தனது வலியை விவரித்தார் ஸ்ரீகுமார். பின்னர் அவருக்கு இலத்திர இதய வரைவு (ஈ.சி.ஜி) சோதனை செய்யப்பட்டு, குறிப்பிடத்தக்க பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.
கனடாவின் எட்மன்டன் நகரில் உள்ள கிரே நன்ஸ் கம்யூனிட்டி மருத்துவமனையில், நெருக்கடி சிகிச்சை பெற எட்டு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியதிருந்தது. அந்தக் காத்திருப்பில், மார்புவலியுடன் வந்த 44 வயது இந்திய வம்சாவளியினர் பிரசாந்த் ஸ்ரீகுமார் உயிரிழந்தார்.
டிசம்பர் 22 ஆம் தேதி, பணியிடத்தில் திடீர் மார்பு வலி எடுத்ததால், ஒரு வாடிக்கையாளர் ஸ்ரீகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் பதிவிற்குப் பிறகு, காத்திருப்பு அறையில் அமர வைக்கப்பட்டார். அவரது தந்தை குமார் ஸ்ரீகுமார் விரைந்து வந்தடைந்தார். தந்தையிடம், "அப்பா, இந்த வலியை தாளமுடியவில்லை" என்று கூறியதாகக் குறிப்பிட்டார்.
மருத்துவப் பணியாளர்களிடம் தனது வலியை விவரித்தார் ஸ்ரீகுமார். பின்னர் அவருக்கு இலத்திர இதய வரைவு (ஈ.சி.ஜி) சோதனை செய்யப்பட்டு, குறிப்பிடத்தக்க பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. பல மணி நேரம் காத்திருந்த பின்னர், வலி நிவாரண மாத்திரை (டைலினால்) மட்டுமே வழங்கப்பட்டது. இதற்கிடையில், அவரது இரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது.
எட்டு மணி நேரத்திற்குப் பிறகு சிகிச்சைப் பகுதிக்கு அழைத்த போது, தந்தையைப் பார்த்து, மார்பில் கை வைத்தவாறே தரையில் வீழ்ந்தார் ஸ்ரீகுமார். உடனடியாக மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, எனினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதயநிறுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மனைவி மற்றும் மூன்று சிறு குழந்தைகளை அவர் விட்டுச்சென்றுள்ளார்.
கொவெனண்ட் ஹெல்த் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த மருத்துவமனை, நோயாளியின் விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது. மேலும், தலைமை மருத்துவப் பரிசோதகர் அலுவலகத்தால் இந்த வழக்கு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. நோயாளியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியும் உள்ளனர். கனடாவின் நெருக்கடி சிகிச்சை சேவைகளின் தாமதங்கள் குறித்து இந்த சம்பவம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.