தனியாளாக போராடிய வெல்லாலகே.. குல்தீப் சுழலில் சுருண்ட இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4வது போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ரன்களும், கேஎல் ராகுல் 39 ரன்களும் விளாசினர்.
இலங்கை அணி தரப்பில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், அசலங்க 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எளிய இலக்கு என்றாலும் இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் இருந்ததன் காரணமாக ஆட்டம் லோ ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப தொடக்க வீரர் நிஷாங்கவை 6 ரன்களில் பும்ரா வீழ்த்தி அசத்தினார். அதேபோல் நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் 15 ரன்களில் மீண்டும் பும்ராவிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிராஜ் பந்துவீச்சில் கருணரத்ன ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தொடர்ந்து சமரவிக்ரம - அசலங்க இணை சிறிது நேரம் போராடியது. 10 ஓவர்கள் கடந்த பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார்.
இரு பக்கம் குல்தீப் யாதவ், இன்னொரு பக்கம் ஜடேஜா என்று அட்டாக் மேல் அட்டாக் செய்தனர். இதனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் சமரவிக்ரம 17 ரன்களிலும், அசலங்க 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த கேப்டன் ஷானக ஜடேஜா பந்தில் 9 ரன்களில் வெளியேற, இலங்கை அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் தனஞ்செய - வெல்லாலகே கூட்டணி இணைந்தது.
வெல்லாலகே தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசி அசத்தினார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 63 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா வீசிய பந்தில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து தனஞ்செய 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து வந்த மஹீஷ் தீக்சன 2 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 171 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை அணி வெற்றிபெற 55 பந்துகளுக்கு 43 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது.
பின்னர் வந்த ரஜித 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த பதிரான டக் அவுட்டானார். இதன் மூலம் இலங்கை அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அதுமட்டுமல்லாமல் 13 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இலங்கை அணியின் பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.