2026 முதல் பிரான்சில் புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டம்

பிரான்சில் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களுக்கான புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டத்தை 2026 நடுப்பகுதியில் தொடங்க உள்ளதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

நவம்பர் 29, 2025 - 05:56
2026 முதல் பிரான்சில் புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டம்

பிரான்சில் 18 மற்றும் 19 வயதுடைய இளைஞர்களுக்கான புதிய தன்னார்வ ராணுவ சேவை திட்டத்தை 2026 நடுப்பகுதியில் தொடங்க உள்ளதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பாதுகாப்பு சவால்கள் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல்மிகு நடவடிக்கைகள் இந்த திட்டத்தை உருவாக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாக அவர் கூறினார். “எங்கள் கூட்டாளிகள் சந்திக்கும் அச்சுறுத்தல்களிடமிருந்து நாம் பின்வாங்க முடியாது; பிரான்ஸ் அமைதியாக இருக்க முடியாது” என மேக்ரான் வலியுறுத்தினார்.

10 மாத காலம் நீடிக்கும் இந்த சேவைக்கு இளைஞர்கள் சம்பளத்துடன் இணைக்கப்படுவார்கள். 2026 ஆம் ஆண்டில் 3,000 பேரை சேர்ப்பதையே முதற்கட்ட இலக்காக பிரான்ஸ் நிர்ணயித்துள்ளது. 2030க்குள் இந்நிலை 10,000ஆக உயர்த்தப்படும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் மொத்த செலவு சுமார் 2 பில்லியன் யூரோவாக இருக்கும். இந்த சேவை முழுவதுமே பிரான்ஸ் நாட்டுக்குள் நடைபெறும்; பங்கேற்பாளர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படமாட்டார்கள். சேவை முடிந்ததும் அவர்கள் மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்பவோ, ரிசர்வ் படையில் இணைவோ அல்லது நிரந்தர ராணுவச் சேவையைத் தொடரவோ வாய்ப்பு உண்டு. இதன் ஒரு பகுதியாக, 2030க்குள் ரிசர்வ் படையினரை 80,000ஆக உயர்த்தும் இலக்கையும் அரசு நிர்ணயித்துள்ளது.

சமீபத்தில் பிரான்ஸ் ராணுவத் தலைமை அதிகாரி ஃபேபியன் மாண்டன் நாட்டில் தியாக உணர்வு குறைவாக உள்ளது எனக் கூறியதால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்த மேக்ரான், இளைஞர்களை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டமே பிரான்ஸ் அரசுக்கு இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

ஐரோப்பாவின் பல நாடுகள் தன்னார்வ ராணுவ சேவை திட்டங்களை ஏற்கனவே நடைமுறையில் கொண்டு வந்துள்ளன. ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் போலந்து தன்னார்வ ராணுவ ஆட்சேர்ப்பை ஊக்குவிக்கின்றன. அதேவேளை, ஆஸ்திரியா, கிரீஸ், பின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் கட்டாய ராணுவ சேவை இன்னும் அமலில் தொடர்கிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!