சிஐடியில் இன்று ஆஜராகவுள்ள முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்
துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்தார்.

வெலிகம பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இன்று (31) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 31, 2023 அன்று, வெலிகம பெலன பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழு மீது, வெலிகம பொலிஸ் அதிகாரிகள், பாதாள உலக உறுப்பினர்கள் என்று நினைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு உப பொலிஸ் பரிசோதகர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், அன்றைய பொலிஸ் மா அதிபராக இருந்த, தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை சந்தேக நபர்களாக பெயரிட மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், குற்றஞ்சாட்டப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் நிலையத் தளபதி நீதிமன்றில் சரணடைந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த ஏற்கனவே பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அவரை அழைப்பது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசிடம் கேட்டபோது, இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.