ஊதுபத்தியால் 1,500 ஆண்டு பழமையான கோவில் எரிந்து நாசம்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் தீக்கிரையாகி முற்றிலுமாக அழிந்துள்ளது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாகாங் பகுதியில், 1,500 ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் தீக்கிரையாகி முற்றிலுமாக அழிந்துள்ளது. பெங்ஹுவாங் மலையில் அமைந்துள்ள இந்தப் பழமைவாய்ந்த கோவில், கிபி 536 ஆம் ஆண்டு தெற்கு லியாங் வம்சத்தின் காலத்தில் ஃபெங்குவாங் என்பவரால் கட்டப்பட்டது.
இன்றளவும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இந்த கோவிலில், இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த ஒரு பெண், ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்திகளை தவறாக கையாண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக கோவில் கூரையில் தீப்பற்றியது.
தீ வேகமாக பரவி, மூன்று மாடிகள் கொண்ட கோவில் முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் அருகிலிருந்த வனப்பகுதிக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
முழுமையாக சேதமடைந்த இந்த வரலாற்று கோவிலைக் புனரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.