மலையக ரயில் சேவை பாதிப்பு; டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டது! 

இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

டிசம்பர் 21, 2023 - 17:16
மலையக ரயில் சேவை பாதிப்பு; டிக்கிரி மெனிகே ரயில் தடம்புரண்டது! 

நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த டிக்கிரி மெனிகே பயணிகள் ரயில், ஹட்டன் மற்றும் கொட்டகலை ரயில் நிலையங்களுக்கு இடையில் சிங்கமலை புகையிரத சுரங்கப்பாதைக்கு அருகில் 109 ¼ மைல் கல்லூக்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று (21) காலை 7.15 மணியளவில், ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டுள்ளன.

தடம் புரண்ட பெட்டிகளில் ஒன்று, ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டடத்தில் மோதியதால், கட்டடத்திற்கும் ரயில் பாதைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு - கோட்டையில் இருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள், ஹட்டன் ரயில் நிலையம் வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு - கோட்டை வரை செல்லும் அனைத்து ரயில்களும் கொட்டகலை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டு ரயில்களுக்கு இடையில் அரச பஸ்களைக் கொண்டு பயணிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!