புத்தாண்டு கொண்டாட்டம்: கொழும்பில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்

புத்தாண்டு இரவை முன்னிட்டு, கொழும்பு - கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 30, 2025 - 11:11
புத்தாண்டு கொண்டாட்டம்: கொழும்பில் விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம்

2026 புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, நாளை புதன்கிழமை (31) வெளி மாகாணங்களிலிருந்து பெருமளவிலான மக்கள், கொழும்பு - காலி முகத்திடல் பகுதிக்கு வருகை தருவார்கள் என பொலிஸார் எதிர்பார்க்கின்றனர். இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

புத்தாண்டு இரவை முன்னிட்டு, கொழும்பு - கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி மற்றும் கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நாளை வழமை போல் போக்குவரத்து நடைபெறும், கடும் நெரிசல் உருவாகும் சந்தர்ப்பங்களில் மட்டுமே தேவைக்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி வீதி ஊடாக கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள் NSA சுற்றுவட்டம் வழியாக காலி வீதி–பாலதக்ஷ மாவத்தை சந்தியில் இடதுபுறமாக (எம்.ஓ.டி சந்தி) திரும்பி, பாலதக்ஷ மாவத்தை மற்றும் மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக காலி முகத்திடல் சுற்றுவட்டம் ஊடாக கொள்ளுப்பிட்டி நோக்கி செல்ல முடியும். காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் பாலதக்ஷ மாவத்தை சந்தி வரை மற்றும் அதற்கு அப்பாலும் செல்ல அனுமதி வழங்கப்படும். எனினும், காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து மாக்கன் மாக்கர் மாவத்தை வழியாக பாலதக்ஷ மாவத்தை ஊடாக காலி வீதி நோக்கி செல்ல அனுமதி இல்லை.

மேலும், பாலதக்ஷ மாவத்தையின் கிளை வீதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறமாகத் திரும்பி கொழும்பிலிருந்து வெளியேற வேண்டும். காலி வீதியின் கிளை வீதிகளிலிருந்து நுழையும் வாகனங்கள் வலதுபுறமாகத் திரும்பி NSA சுற்றுவட்டம் நோக்கி பயணிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ், கொழும்பு நகரின் நடைபாதைகளிலும் பிரதான வீதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் வாகனங்களை நிறுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது. விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காக சுமார் 1,200 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், கொழும்புக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்காக விசேட தரிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 5,900 வாகனங்களை நிறுத்தக்கூடிய இடவசதி இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வீதியோரங்களில் பணம் வசூலிக்காமல் வாகன நிறுத்தம் அனுமதிக்கப்படுகிறது.

• கோட்டை காவல் பிரிவில் உள்ள பாலக்ஷ மாவத்தை எம்.ஓ.டி. வாகன நிறுத்துமிடம் 

• கொள்ளுப்பிட்டி,பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை கடற்கரை வீதி

• கோட்டை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவுகளில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை

• கம்பெனி தெரு பொலிஸ் பிரிவில் மட்டும் பார்சன்ஸ் வீதி வெளியேறும் பாதை

• காலி வீதியில் உள்ள வெள்ளவத்தை சவோய் அருகே இருந்து பகத்தலே வீதி சந்தி வரை

• குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ஆனந்த குமாரசாமி மாவத்தை 

• நெலும் பொக்குன சுற்றுவட்டத்திலிருந்து நூலக சுற்றுவட்டம் நோக்கி (இடது)

• எஃப்.ஆர். சேனநாயக்க மாவத்தை

• குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ரீட் மாவத்தை, ரீட் அலுவலக சந்திப்பிலிருந்து ரீட் மாவத்தை வரை, 

• ரீட் தர்ஸ்டன் சந்திப்பு, வீதியின் வலது பக்கத்தில்

• குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள நிதாஸ் மாவத்தை, 

• நிதாஸ் சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் வரை, வீதியின் வலது பக்கத்தில்

• குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள மைட்லேண்ட் பிளேஸ்

• குருந்துவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள அறக்கட்டளை நிறுவனம் வீதி

பின்வரும் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள் கட்டணம் வசூலிக்கும் அடிப்படையில் கிடைக்கின்றன.

• புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் பெஸ்டியன் மாவத்தை, பழைய மெனிங் சந்தை கார் நிறுத்துமிடம்

• கோட்டை பொலிஸ்; பிரிவில் விமலதர்மசூரிய கடிகார கோபுர கார் நிறுத்துமிடம்

• கோட்டை பொலிஸ்; பிரிவில் ராசிக் ஃபரித் மாவத்தை, ஹேமாஸ் கார் நிறுத்துமிடம்

• டி.ஆர். விஜேவர்தன மாவத்தை லேக் ஹவுஸ் கார் நிறுத்துமிடம்

• லீடன் பாஸ்டியன் மாவத்தை, கோட்டை பொலிஸ் பிரிவு

• பிரிஸ்டல் வீதி, கோட்டை பொலிஸ்; பிரிவு

• டியூக் வீதி, கோட்டை பொலிஸ் பிரிவு

• யூனியன் பிளேஸ், டாசன் வீதி சந்தி, கம்பெனி வீதி பொலிஸ் பிரிவு

• காமினி சுற்றுவட்டம் - செயிண்ட் கிளெமென்ட் கார் நிறுத்துமிடம், மருதானை பொலிஸ் பிரிவு

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!