பங்களாதேஷில் மீண்டும் வன்முறை சூழல்: இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை

அமைதி காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாட்டில் மீண்டும் வன்முறை சூழல் நிலவுகிறது. மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 

டிசம்பர் 26, 2025 - 08:25
பங்களாதேஷில் மீண்டும் வன்முறை சூழல்: இளைஞர் கொடூரமாக அடித்துக் கொலை

பங்களாதேஷில் அரசியல் பதற்றமும் சமூக வன்முறைகளும் மீண்டும் தலை தூக்கியுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் பெரிய அளவில் வன்முறையாக மாறியது. 

அப்போது 1,581 பேர் உயிரிழந்தும், 25,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். போராட்டத்தின் விளைவாக ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்து, அவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். 

நோபல் பரிசு பெற்றவரும், கிராமிய வங்கி நிறுவனருமான முகமது யூனுஸ், இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றார். ஷேக் ஹசீனா மீது குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை வழங்கியுள்ளது. 2026இன் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று யூனுஸ் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், அமைதி காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நாட்டில் மீண்டும் வன்முறை சூழல் நிலவுகிறது. மாணவர் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாடி, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். 

அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், அவர் சமீபத்தில் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் பயணித்த நண்பரும் சுடப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கு முன்பே, இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. அதற்கு பதிலடியாக, காசியானுவில் உள்ள இந்து வாலிபர் திபு சந்திரதாஸ் எரித்துக் கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, நேற்று டாக்காவின் பஜார் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் அருகே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள மக்கள் கூடியிருந்த போது, மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு ஒன்றை கூட்டத்தில் தூக்கி வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டில் “சியாம்” என்ற 20 வயது இளைஞர் உடல் சிதறி உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இந்து இளைஞர் அம்ரித் மண்டல், நேற்று உள்ளூர் கும்பல் ஒன்றால் கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வழிப்பறி முயற்சியில் ஈடுபட்ட போது பிடிபட்டு தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ச்சியான இந்த வன்முறைகள், பங்களாதேஷில் மத சார்பற்ற சமூக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!