இலங்கையை நோக்கி வரும் வங்காள விரிகுடா புயல் - வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களில் மழை எச்சரிக்கை
"டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிகின்றன.
வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதன் தாக்கத்தால் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சுமார் 75 மில்லி மீட்டர் மழை பெய்யக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த மழை அளவு கடுமையானதாக இருக்காவிட்டாலும், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் நீர் பெருக்கை ஏற்படுத்தி, கூடுதல் ஆபத்தை உருவாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிபிசி வானிலை முன்னறிவிப்பின்படி, வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகங்கள் புயலாக மாறி, இலங்கையின் வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்ந்து, தீவிரமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத்திடம் கருத்து கேட்கப்பட்டதில், வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், நாட்டின் நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் நீர்மட்டத்தை மேலாண்மை செய்ய நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி சபை முழு கவனத்துடன் தயாராகி வருவதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், அண்மைய "டித்வா" சூறாவளியின் கனமழையால் பெரும்பாலான முக்கிய நீர்த்தேக்கங்களும் குளங்களும் நிரம்பி வழிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
“150 முதல் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை மீண்டும் பெய்தால், அது மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும். அதிகப்படியான நீரை கட்டுப்படுத்தி, அவசியமான வெளியேற்ற நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தயாராக உள்ளனர்,” என்று அவர் விளக்கமளித்தார்.
மேலும், சமீபத்திய வெள்ளத்தால் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றின் சீரமைப்பு முயற்சிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.