தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! சூறாவளிக்குச் சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 9, 2023 - 19:12
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! சூறாவளிக்குச் சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த தாழமுக்கம் படிப்படியாக சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று மதியம் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், வட அகலாங்குகள் 02N இற்கும் 15N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 85E இற்கும் 100E இற்கும் இடையில் உள்ள கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25 - 35 கிலோமீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 - 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!