அலைபேசிகளை திருடி விற்பனை செய்த கும்பல் சிக்கியது
கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி, வைத்தியசாலைகள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை பிரதானமாக இலக்கு வைத்து, சக நோயாளர்களாகவும் சிற்றூழியர்களாகவும் நடித்து, சூட்சுமமாக அலைபேசிகளை திருடியுள்ளனர்.

நீண்ட காலமாக அலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் அலைபேசிகளை சூட்சுமமாக களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல் புத்திக வழிநடத்தலில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில், கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்ற பொலிஸ் குழு, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்களை கைது செய்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்குபொலிஸாரினால் துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விசாரணையின் போது கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி, வைத்தியசாலைகள் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை பிரதானமாக இலக்கு வைத்து, சக நோயாளர்களாகவும் சிற்றூழியர்களாகவும் நடித்து, சூட்சுமமாக அலைபேசிகளை திருடியுள்ளனர்.
குறித்த திருட்டுச் சம்பவத்தில் தலைவராக 32 வயது சந்தேகநபர் செயற்பட்டு வந்துள்ளார்.
மற்றைய சந்தேகநபர், கல்முனை மாநகரில் அலைபேசி கடையை நடத்தி வரும் 39 வயதுடையவராவார்.
திருட்டு கும்பலினால் களவாடப்பட்டு வருகின்ற அலைபேசிகளை கொள்வனவு செய்து, அவர் விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இது தவிர, சந்தேகநபர்கள் பொது இடங்கள், கல்முனை பிரதான பஸ் நிலையம் மற்றும் பஸ்களில் பயணம் செய்பவர்களையும் இலக்கு வைத்து இத்திருட்டை சாதுரியமாக மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மண்டூர், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்களே இத்திருட்டினால் தமது பெருமதியான அலைபேசிகளை இழந்துள்ளனர்.
பொலிஸாரினால் தற்போது கைப்பற்றப்பட்டள்ள தொலைபேசிகளின் பெறுமதி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியானவை என்பதுடன், சில அலைபேசிகளின் உரிமையாளர்கள் தத்தமது அலைபேசிகளை இனங்கண்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் கடந்த காலங்களில் கைத்தொலைபேசிகளை தொலைத்திருந்தால் தம்மை தொடர்புகொள்ளுமாறு, கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கேட்டுள்ளார்.
(பாறுக் ஷிஹான்)