பிரித்தானியாவில் குடியேற்ற விரோத பொய் பிரச்சாரம் மூலம் கோடிகள் சம்பாதித்த இலங்கையர்: விசாரணையில் அதிர்ச்சி!
இந்தப் பிரச்சாரம் தொடர்புடைய பக்கங்கள் மற்றும் குழுக்கள் 1.6 மில்லியன் பயனர்களை சென்றடைந்துள்ளன.
பிரித்தானியாவில் குடியேறிகளுக்கு எதிரான மற்றும் இஸ்லாமிய வெறுப்பு மிக்க தவறான தகவல்களை 100க்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டு, அதில் தோன்றிய விளம்பரங்கள் மூலம் £230,000 சம்பாதித்த இலங்கை இன்ஃப்ளூயன்சர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த கீத் சூரியபுர என்ற இன்ஃப்ளூயன்சர், தன்னுடைய மாணவர்களுடன் இணைந்து 100க்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் மூலம் பிரித்தானியாவில் இவ்வாறு பொய் பிரச்சாரம் நடத்தி வந்ததாக ‘The Bureau of Investigative Journalism’ நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
லண்டன் மேயர் சதிக் கான் முஸ்லிம்களுக்கு மட்டும் 40,000 கவுன்சில் வீடுகள் கட்ட வாக்குறுதி அளித்தார், லேபர் கட்சி, முழுவதும் இஸ்லாமின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது மற்றும் லண்டனில் கவுன்சில் வீடுகள் முஸ்லிம்களுக்கே வழங்கப்படுகின்றன என பல அவதூறுத் தகவல்கள் இந்த பக்கங்களின் மூலம் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சூரியபுர தானே £230,000 (சுமார் 1 கோடி ரூபாய்) சம்பாதித்ததாகவும், ஒரு பேஸ்புக் பக்கத்தில் மாத்திரம் ஒரு மாதத்தில் £1,000க்கு மேல் வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இது இலங்கையின் சராசரி மூன்று மாத சம்பளத்துக்கு இணையானதாம்.
தான் நடத்தும் ‘ஒன்லைன் அகாடமி’ வாயிலாக 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த தொழில்முறையை கற்றுக்கொடுத்ததாகவும், அதில் “முதியவர்களை குறிவையுங்கள். அவர்கள் தான் குடியேற்றக்காரர்களை விரும்ப மாட்டார்கள்” என்று அறிவுறுத்தியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் விலையுயர்ந்த கடிகாரங்கள், 5 நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்தும் புகைப்படங்கள், நீச்சல் தடாகம் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எடுத்த வீடியோக்கள் ஆகியவற்றை பகிர்ந்து, தனது வெற்றியை அவர் விளம்பரப்படுத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தப் பிரச்சாரம் தொடர்புடைய பக்கங்கள் மற்றும் குழுக்கள் 1.6 மில்லியன் பயனர்களை சென்றடைந்துள்ளன.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் எவ்வாறு பேரழிவை ஏற்படுத்துகின்றன என்பதற்கான இது ஒரு முக்கிய உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.