யாழ். பல்கலைக்கழகத்தில் நாளை உயர் கல்வி வழிகாட்டல் செயலமர்வு
இவை தொடர்பிலான பொது அமர்வு காலை 09 மணிதொடக்கம் 10 மணிவரை கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் அலகும் விஞ்ஞானபீட தொழில் வழிகாட்டல் அலகும் இணைந்து நடத்தும் உயர்தரத்திற்குப் பின்னரான உயர் கல்வி வழிகாட்டல் என்னும் தொனிப்பொருளினாலான செயலமர்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மற்றும் நூலக கேட்போர் கூடத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (27) நடைபெறவுள்ளது.
கணிதத்துறை மற்றும் உயிரியல் துறை மாணவர்களுக்கான இக்கருத்துப் பகிர்வில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சரியான முறையில் நிரப்புதல் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் நுட்பங்கள் மற்றும் பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் சிறப்பான முறையில் வழிகாட்டல்கள் இடம்பெற உள்ளன.
இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் வேறுபட்ட துறைகளுக்கான வாய்ப்புகள், தொழில்வாண்மை சார் கற்கை நெறிகள் போன்றவை தொடர்பிலும் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் இடம்பெறும்.
பொறியியல்,உயிரியல், பௌதீக விஞ்ஞானம், கணினி விஞ்ஞானம் தொடர்பிலான வேறுபட்ட பல்கலைக்கழகங்களில் உள்ள வாய்ப்புக்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படும்.
இவை தொடர்பிலான பொது அமர்வு காலை 09 மணிதொடக்கம் 10 மணிவரை கைலாசபதி கலையரங்கில் இடம்பெறும்.
பின்னர் 10 மணிதொடக்கம் 12 மணிவரை கணிதத்துறைக்கான வழிகாட்டல் கைலாசபதி கலையரங்கிலும், உயிரியல் துறைக்கான வழிகாட்டல் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்திலும் இடம்பெறும்.
சிறப்பான முறையில் இடம்பெறவுள்ள இந்த வழிகாட்டல் செயலமர்வில், பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களும் உயர்கல்விக்கான வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களும் மற்றும் உயர்தரம் பயிலும் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
முக்கிய குறிப்பு :-
ஏற்கெனவே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்கள் விண்ணப்ப முடிவுத்திகதியில் இருந்து இரண்டு வார காலப்பகுதிக்குள் விருப்பொழுங்கை மாற்ற முடியும். இச் செயலமர்வில் கலந்துகொள்வதன் மூலம் கற்கைநெறிகள் தொடர்பான ஆழமான விவரங்களை அறிவதன் மூலம் விருப்பொழுங்குகளில் மாற்றங்கள் செய்யும் சாத்தியம் உள்ளது.