பொருட்கள், சேவைக் கட்டணங்களை மின் கட்டண திருத்தம் மூலம் 20%ஆல் குறைக்கலாம்

செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது

ஜுலை 17, 2024 - 14:50
ஜுலை 17, 2024 - 14:56
பொருட்கள், சேவைக் கட்டணங்களை மின் கட்டண திருத்தம் மூலம் 20%ஆல் குறைக்கலாம்

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20 சதவீதத்தால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 

மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை,  மின் கட்டணம் குறைக்கப்படும் அதே தினத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மின்சகதி மற்றும் வலுசக்தி அமைச்சர் வர்த்தக சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.

மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், இந்த நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,

“ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 

கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பேரில், ஏப்ரல் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல், ஜூலை மாதம் திருத்தம் செய்ய இணக்கம் காணப்பட்டது. இந்த மின் கட்டணத் திருத்தம் ஜூலை 16 முதல் அமுலுக்கு வருகிறது.

“அடுத்த கட்டணத் திருத்த முன்மொழிவை ஒக்டோபர் மாதத்தில் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. 

“மின் கட்டணக் குறைவுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த காலங்களில் வங்கி வட்டி விகிதம் 36% வரை அதிகரித்தது. 

“கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மின்சார சபைக்கு எந்த ஒரு ஊழியரும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. தேவைப்பாடுள்ள 26,000 ஊழியர்களுக்குப் பதிலாக, இன்று 22,000 ஊழியர்கள் மாத்திரமே உள்ளனர்.

90 அலகுகளை விட குறைவாக பாவிக்கும் மக்களுக்கு சலுகைகள் 

“மேலும், செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது. 

“79% வீடுகள் 90 அலகுகளிற்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. அவர்களுக்கு பாரிய அளவு நிவாரணம் கிடைத்துள்ளது. மின்கட்டணம் அதிகரித்த போது ஒரு மின் அலகு உற்பத்திச் செலவு சுமார் 48 ரூபாய். இன்று 35 ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது. 

“உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 25% - 26% வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களுக்கு 30% குறைக்கப்பட்டுள்ளது. 

3 ஆண்டுகளில் மின் கட்டணம் மேலும் குறைவடயும்

“இந்த அரசாங்கம், மின் கட்டணத்தை திருத்த முன்னர் நடைமுறையில் இருந்த கட்டணத்தை விடக் குறையும் வகையில் இந்த திருத்தத்தில், கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

“மின் உற்பத்திச் செலவைக் குறைத்தால்தான் எதிர்காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும். அதற்கு குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மின் உற்பத்தி நிலையங்களை விரைவாக அமைக்க வேண்டும். இந்தப் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிர்மாணித்து முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை, இதனை விடக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. 

“180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 189,000 பேர் மாத்திமே உள்ளனர். 30 அலகுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 290 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் 01 - 60 அலகுகளை பயண்படுத்தினால், நீங்கள் 790 ரூபாய் செலுத்த வேண்டும்.

“மேலும், இந்த மின் கட்டணத் திருத்தத்தில் தொழிற்சாலைகள் மற்றும் சிறு வர்த்தகங்களுக்கு குறைந்தபட்சம் 20% விலை குறைக்கப்பட்டுள்ளது. 

“மின்சார விலை அதிகரிக்கப்பட்ட அதே தினத்தில் அதிகரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளையும் வர்த்தக நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் சேவைக் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

“சமீபகாலமாக எரிபொருள் விலையும் மண்ணெண்ணெய் விலையும் குறைந்துள்ளது. அந்தச் சந்தர்ப்பங்களிலும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைவதை நாம் காணவில்லை. 

“எனவேதான் இம்முறை மின்சாரத்தின் பாரிய கட்டணக் குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். குறைந்தபட்சம் 20% விலை குறைக்க முடியும்” என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!