மோசமான வானிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு
இந்த அனர்த்தத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துக்களால் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

மோசமான வானிலை காரணமாக நாட்டின் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துக்களால் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, மோசமான காலநிலை காரணமாக நேற்றிரவு மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு மற்றும் பாறைகள் விழும் அபாயம் காரணமாக கண்டி - மஹியங்கனை பிரதான வீதியை கண்டி, தன்னேகும்புர சந்தி மற்றும் ஹசலக்க, பலம சந்தி ஆகிய இடங்களில் நேற்று மாலை 6 மணி முதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மலபட்டாவ பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வலப்பனையிலிருந்து ஹகுரன்கெத்த ஊடாக கண்டி வரையான வீதி மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.